தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சில நாட்களாகவே பரவலாக மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை அடுத்துள்ள பள்ளிக்கரணை பகுதியில் பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. சென்னை மாநகராட்சி 190வது வார்டுக்கு உட்பட்ட பள்ளிக்கரணை பசும்பொன் நகர் 5வது தெருவில் நேற்று பெய்த மழையால் மழை நீரானது தேங்கி நின்றது.
இந்நிலையில் இன்று காலை அந்த வழியாக சென்ற வேன் ஒன்று மின் கம்பத்தின் மீது மோதியது. இதில் மின் கம்பம் வீட்டின் மேல் சாய்ந்தது. இதனால் மின் கம்பிகள் தேங்கி நின்ற மழை நீரில் விழுந்தன. உடனடியாக இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் மின்சாரத்தை துண்டித்திருக்கிறார்கள். ஆனால் சீரமைப்பு செய்யாமலே சிறிது நேரத்தில் மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. அப்பொழுது நான்கு நாய்கள் அந்த வழியாக மழை நீரில் சென்றபோது மின்சாரம் தாக்கி நீரிலேயே துடிதுடித்து உயிரிழந்தன. ஒருவேளை மனிதர்கள் யாரேனும் இவ்வாறு கடந்து இருந்தால் மனித உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கும் என பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.