தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள பிரச்சனை குறித்து தலைமைச் செயலகத்தில் விஷாலுக்கு எதிரான அணியினர் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். இந்த சந்திப்பில் இயக்குநர் பாரதிராஜாவும் இருந்தார்.
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாரதிராஜா,
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு சில பைலா உள்ளது. ஜென்ரல் பாடியை கூட்டி இரண்டு வருடங்கள் ஆகிறது. உதவித் தலைவர்கள் இரண்டு பேர் சங்கத்தன் பக்கம் வந்து ஒரு வருடத்திற்கு மேலாகிறது.
தயாரிப்பாளர் சங்கத்துக்கு என்று வைப்புநிதியாக 7.85 கோடி ரூபாய் இருந்தது. அந்த 7.85 கோடி ரூபாய்க்கு கணக்கு கேட்டால் இதுவரையில் பதில் இல்லை. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு என்று பதிவுத்துறை அலுவலகம் ஒன்று உண்டு.
அங்கே தான் கணக்கு வழக்குகள் தொடர்பான அனைத்து விவகாரங்களும் நடைபெறவேண்டும். ஆனால், விஷால் தலைவராகப் பொறுப்பேற்றதும் புதிதாக ஒரு கட்டடம் வாடகைக்கு எடுக்கப்பட்டு அலுவலகம் அங்கே நடைபெறுகிறது. இதில் ஏதோ ஒரு மறைவு இருக்கிறது. தனியாக ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து அதற்கு இந்த சங்கத்தின் மூலமாக வாடகை கட்டுகிறீர்கள். இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது?. இதுதான் கேள்வி.
சங்கத்தின் கணக்கு வழக்குகள் எல்லாம் அந்த கட்டிடத்தில் உள்ளது. இதை கேட்க நேற்று போனபோது, பதில் சொல்ல யாரும் வரவில்லை. தலைவர் வரவில்லை, செயலாளர் வரவில்லை யாரும் வரவில்லை. அதனால் அந்த அலுவலகம் பூட்டப்பட்டது. பூட்டினால் விவகாரம் வரும். விவகாரம் வந்தால் இதனை யாரிடம் சொல்ல முடியும். எங்களுக்கு மையமாக இருந்து பைசல் பண்ண வேண்டியது அரசுதான். அதற்காகத்தான் அரசிடம் முறையிட்டுள்ளோம். பிரச்சனையை அவர்கள் முடித்து வைப்பார்கள் என்ற நம்பிக்கையில் செல்கிறோம் என்றார்.