நெல்லை மாவட்டத்தின் களக்காடு பகுதிகளில் அண்மை நாட்களாக பைக், சைக்கிள்கள் திருட்டு, வீடு புகுந்து கொள்ளையடிப்பது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்தச் சூழலில் களக்காடு கோவில்பத்து ஏரியாவில் இரவில் இரண்டு முகமூடி அணிந்த கொள்ளையர்கள் நடமாடி இருக்கிறார்கள். அவர்கள் ஒரு சில வீடுகளைக் குறிவைத்து கொள்ளைக்காக வீட்டின் கதவை உடைக்க முயற்சி செய்துள்ளனர். அது சமயம் அந்தப் பக்கமாகத் திரிந்த தெரு நாய்கள் சத்தம் கேட்டு, அவர்களைத் துரத்தி துரத்தி விரட்டியதால் கொள்ளையடிக்கும் முயற்சியைக் கைவிட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தக் காட்சிகள் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளின் சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளன. இரவில் முகமூடி கொள்ளையர்கள் நடமாடுவது, அவர்களைத் தொடர்ந்து நாய்கள் விரட்டும் காட்சிகள் அப்பகுதியில் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும் கோவில்பத்து நகரில் டீக்கடை உரிமையாளர் ஒருவர் வீட்டில் நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் தொடர்புடையவர்கள் இது வரையிலும் கண்டறியப்படவில்லை.
அதேபோல், தென்காசி மாவட்டத்தின் ஆவுடையனூரில் வயதான ஆசிரியத் தம்பதியரைத் தாக்கி 150 சவரன் நகைகள், மற்றும் 10 லட்சம் பணம் என முகமூடி கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.