![velmurugan](http://image.nakkheeran.in/cdn/farfuture/brCpkPhKd7VtZhQ_8QVCp0gCGaeQN5ChNp72778e6ns/1734185249/sites/default/files/inline-images/a1847.jpg)
கடலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ''எப்போதெல்லாம் தமிழகத்தில் பேரிடர் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் பாதிக்கப்படும் இடம் கடலூர். சாத்தனூர் அணை திறப்பினால் எனது பண்ருட்டி தொகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குடும்ப அட்டைக்கு வெறும் ரூ. 2 ஆயிரம் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அதுவும் மாவட்டம் முழுவதும் வழங்கப்படவில்லை. சென்னை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் புயல் மழை ஏற்பட்டால் ரூ 6 ஆயிரம் வழங்குகிறீர்கள். இதில் சிமெண்ட் ஆலை முதலாளி, தொழிலதிபர் என வீட்டு கதவை தட்டி கொடுக்கீறீர்கள். வட மாவட்ட மக்கள் மட்டும் ஏமாளிகளா?
துணை முதல்வர் வரும் போது மூத்த சட்டமன்ற உறுப்பினரான எனக்கு தகவல் இல்லை. இருந்த போதிலும் அவரை சந்தித்து பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட வேண்டுகோள் வைத்தேன். ஆனால் அவர் நேரமில்லை என வந்து பார்வையிடவில்லை.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கி பிச்சையா போடுறீங்க என ஆவேசப்பட்டவர் அரசின் நிர்வாகத் திறன் இன்மையால் மக்கள் உயிர் பலியாகினர். மது குடித்து உயிரிழந்தால் ரூ.10 லட்சம் அரசு வழங்குகிறது. வெள்ளத்தில் இறந்தால் ரூ 2 லட்சம் 3 லட்சம், திருவண்ணாமலையில் நிலச்சரிவில் இறந்தவர்களுக்கு ரூ 5 லட்சம் உயிர் என்பது அனைத்தும் ஒன்று தான் எனவே இதுபோன்ற உயிர் இழந்தால் பாரபட்சம் இல்லாமல் ரூ 25 லட்சம் அனைவருக்கும் வழங்க வேண்டும்.
தமிழகம் மிகப் பெரிய பேரிடரில் சிக்கியுள்ளது அதனால் சட்டமன்றத்தை 2 நாட்கள் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனி ஆளாக குரல் கொடுத்தேன் அதற்கு செவி சாய்க்கவில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டமன்றத்தை நடத்துவோம் எனக் கூறினார்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இப்படி நடந்து கொள்கிறீர்கள். இது தமிழ்நாட்டு சட்டமன்ற வரலாற்றில் நடந்தது இல்லை.
ஆட்சி முடிந்தால் மக்களை சந்திக்க வந்து தான் ஆக வேண்டும். தேர்தலின்போது முதல்வருடன் அமர வைப்பவர்கள், தேர்தல் முடிந்தவுடன் ப்ரோடோகால் வந்து விடுகின்றது. என்றும், இதற்கெல்லாம் தேர்தல் நேரத்தில் மக்கள் எதிர்வினையாற்றுவார்கள். அதிகாரிகள் செய்யும் தவறுகள் முதல்வருக்கு தெரிகின்றதா? இல்லையா?
இந்த மாவட்டத்தில் தொழில் தொடங்குவதற்காக வந்த கெம்பிளாஸ்ட் நிறுவனம் 150 ஏக்கரை ஏக்கர் 5 ஆயிரத்திற்கு வாங்கிக்கொண்டு தற்போது மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துவிட்டு ஒரு ஏக்கர் 10 கோடிக்கு என விற்பனை செய்துள்ளார்கள். இதை நான் சட்டமன்றத்தில் போராடி தடுத்து நிறுத்தி வைத்தேன். அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஆட்சியாளர்களுடன் சேர்ந்து பிளாட் போட்டு விற்பனை செய்துள்ளனர். இது குறித்து சட்டமன்றத்தில் கவனயீர்ப்பு, ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்துள்ளேன் தடுத்து நிறுத்த முடியவில்லை.
அதேபோல் மருங்கூர் ஊராட்சியில் முழுக்க முழுக்க ஆதிதிராவிட மக்களுக்காக வழங்கிய 120 ஏக்கர் பஞ்சமிநிலம் அந்த மக்களிடம் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை தருகிறோம் என பொய் வாக்குறுதிகளை கூறி அந்த காலத்தில் ஹிந்துஸ்தான் லீவர் என ஒரு நிறுவனம் தொழில் தொடங்கி அதை மூடிவிட்டு செல்கிறார். அதன்பிறகு டேனக்ஸ் என்ற நிறுவனம் அதனை வாங்கி மஞ்சள் நோட்டீஸ் கொடுத்து விட்டு மூடி விட்டு செல்கிறார்கள். அதில் பணியாற்றிய மக்களுக்கோ, இடம் கொடுத்த மக்களுக்கோ எந்த இழப்பீடும் கொடுக்கவில்லை.
நெய்வேலி பிரதான சாலையில் உள்ள அந்த இடத்தை ஏக்கர் 10 கோடி விற்பனை செய்ய ஊராட்சி மன்ற தலைவர் அனுமதி வழங்காததால் ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் பொன்னையா ஐஏஎஸ் மற்றும் சம்பந்தப்பட்ட ஊரக வளர்ச்சி துறையினர் சென்னையில் அவரது சேம்பரில் வைத்து மிரட்டி கையெழுத்து வாங்கியுள்ளார்கள் இதற்கு ஆதாரம் உள்ளது.
சட்டத்தை வளைத்து வட்டார வளர்ச்சி அலுவலருக்கு, இயக்குனருக்கும் அதிகாரம் உள்ளது எனக்கூறி ஊழல் அதிகாரிகள் உடந்தையாக திமுக ஆட்சியாளர்கள் செய்துள்ளனர். இதுகுறித்து தமிழக சட்டமன்றத்தில் பொன்னையா ஐஏஎஸ்-ஐ பணி நீக்கம் செய்ய வேண்டும் என முதல்வரிடம் கடிதம் அளித்துள்ளேன்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக இருந்தால் விட்டு விடலாமா எந்த கொம்பனாக இருந்தாலும் நெஞ்சுரத்துடன் சட்டமன்றத்தில் நடவடிக்கை எடுக்க போராடி வருகிறேன். ஊழலுக்கு துணை போகும் அதிகாரிகளை தமிழக முதல்வர் இரும்பக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இல்லையெனில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மக்களை திரட்டி பெரும் போராட்டத்தை முன்னெடுக்கும்'' என்றார்.