மதுரை மந்தி குளம் பகுதிக்கு குடும்பத்துடன் புதிதாக குடிவந்த பாலசுப்ரமணியன் என்ற சாமியார் அங்குள்ள மக்களிடம் நயமாகப் பேசி பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு தான் பெரிய மாந்த்ரீக மந்திரவாதி என்றும், தன்னிடம் மாய சக்திகள் உள்ளது எனக்கூறி சாமியாடி அங்குள்ளவர்களுக்கு அருள்வாக்கு கூறி வந்துள்ளார்.
மேலும் அப்பகுதி மக்கள் இவரை சந்திக்க வரும் பொழுது உங்களுக்கு என்ன கஷ்டம் என்று என்னிடம் கூறுங்கள் என சாமியாடி அவர்களுக்கு பண கஷ்டம் இருப்பதாக இவரே கூறி 2000 ரூபாய் நோட்டுகளை மந்திரம் செய்து வரவழைத்து அவர்களுக்கு கொடுத்து ஆசையை தூண்டி உள்ளார். மேலும் தனது மகன் சினிமாவில் நடித்து வருகிறான். எங்களுக்கு பெரிய பெரிய இடங்களில் பழக்கவழக்கள் உண்டு எனவும் கூறி ஏமாற்றி வந்துள்ளார்.
கையில் கற்பூரத்தை வைத்துக் கொளுத்தி வாயில் போட்டு விழுங்கிய பின் சாமி வருவது போல நடித்து அருள்வாக்கு கூறுவது இவர் ஸ்டைல். இதனால் அப்பகுதி மக்கள் அவரை உண்மை சாமியார் என நம்பிவந்துள்ளனர்.
இந்நிலையில் தன்னிடம் உள்ள மாந்த்ரீக சக்தியின் மூலம் குட்டிசாத்தானை வரவழைத்து அதன் மூலம் மூட்டை மூட்டையாக பணம் கொடுக்கும் ஒரு பீரோ உள்ளது என அப்பகுதி மக்களை நம்பவைத்துள்ளார். அந்த அதிஷ்ட பீரோவை 45 நாட்கள் வீட்டில் வைத்து பூஜை செய்து, தான் சொல்லும் நேரத்தில் திறந்து பார்த்தால் பணம் மூட்டை மூட்டையாக, கோடி கோடியாக பணம் இருக்கும் என பொய் மூட்டைகளை அவிழ்த்துள்ளார் பாலசுப்ரமணியன்.
இதைநம்பிய அக்கம் பக்கத்தினர் சுமார் 30 க்கு மேற்பட்டோர் கடனுக்கு, வட்டிக்கு பணத்தை வாங்கி 2 லட்சம் 3 மூன்று லட்சம் கொடுத்து அந்த பீரோவை வீட்டில் வைக்க ஆசைப்பட்டு வாங்கி வைத்து பூஜை செய்துவந்தனர். சுமார் 50 லட்சம் ரூபாயை வாரிசுருட்டிய பாலசுப்ரமணியன் 45 நாட்கள் ஆகியும் அதிஷ்ட பீரோவை திறக்க உத்தரவிடவில்லை. இதனால் சந்தேகமடைந்த மக்கள் போலிசாமியார் பாலகிருஷ்ணனை நெருங்கியுள்ளனர். ஆனால் இன்று இரவு ஒருநாள் மட்டும் பூஜை செய்தால் போதும் பணம் கொட்டும் எனக்கூறி மக்களை சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளார்.
ஆனால் மறுநாளே குடும்பத்துடன் ஊரை காலிசெய்து ஓடிவிட்டார் போலிசாமியார் பாலகிருஷ்ணன்.இதனைத்தொடர்ந்து போலீசாரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.
மூட்டை மூட்டையாக பணம் கொடுக்கும் குட்டிச்சாத்தான் பீரோ என பொய் மூட்டையை அவிழ்த்துவிட்ட போலிசாமியார் பணத்துடன் எஸ்கேஎப் ஆன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.