தமிழகத்தில் இரண்டாம் அலை கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளின் உறவினர்களை வெளியில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி வர பரிந்துரைகின்றனர். ஒரு டோஸ் ரெம்டெசிவிர் 1,500 ரூபாய் என இருக்கும் நிலையில் கள்ளச் சந்தையில் அதன் விலை பல்லாயிரக்கணக்கில் கூடி உள்ளது.
இந்நிலையில் சென்னை தாம்பரம் அருகே கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்க முயன்ற மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரெம்டெசிவிர் மருந்தை அதிக விலைக்கு விற்க முயன்றதாக மருத்துவர் முகமது இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான மருத்துவர் முகமது இம்ரான் கானிடமிருந்து 17 ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.