வேலூர் மாவட்டம், வாணியம்பாடி நகரம் இப்போதுயெல்லாம் ரவுடிகளின் அராஜகம் அதிகரித்து வருகிறது என்கிற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. காவல்துறை அதனை கண்டும் காணாமல் இருக்கிறது. ரவுடிஸம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முயன்றால் நான் அமைச்சரோட ஆள் எனச்சொல்வதால் என்ன செய்வது எனத்தெரியாமல் போலிஸார் முழிக்கின்றனர் என்கின்றனர்.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அடிதடி ஒன்றில் அடிப்பட்ட சித்திக் என்பவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 29ந்தேதி இரவு மருத்துவமனைக்குள் புகுந்த ஒரு கும்பல் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சித்திக்கை தாக்கியுள்ளனர். அதோடு, மருத்துவமனையின் ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து உடைத்துவிட்டு சென்றுள்ளனர்.
இந்த தகவல் மருத்துவமனை தரப்பில்இருந்தே காவல்துறைக்கு சொல்லப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வந்து பார்த்த காவல்துறை அதிகாரிகள், அங்கிருந்த மருத்துவ பணியாளர்களிடம் விசாரித்தவர்கள், யார் வந்து தாக்கியது என சித்திக்கிடம் கேட்டுள்ளனர். வாணியம்பாடி நேதாஜீநகர் இம்தியாஸ், தனது ஆட்கள் 15 பேருடன் வந்து தாக்கினான் எனக்கூறியுள்ளார். ஏரியாவில் அவர் ரவுடித்தனம் செய்கிறார், அதுப்பற்றி கேட்பவர்களை தாக்குகிறார் எனச்சொல்லியுள்ளார்.
போலிஸார் உடனடியாக இரவோடு இரவாக சித்திக் கை கைது செய்தனர். சித்திக்குடன் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. தப்பியோடி தலைமறைவாக உள்ள பத்துக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
வாணியம்பாடி நகரத்தில் ரவுடிஸம், கட்டப்பஞ்சாயத்து, மாமூல் வசூல் செய்யும் சின்ன சின்ன ரவுடிகளை பிடித்தால் நாங்க யார் தெரியுமா?, அமைச்சரோட ஆளுங்க என வாணியம்பாடி எம்.எல்.ஏவும், அமைச்சர் நிலோபர்கபிலின் பெயரை சொல்வதால் போலிஸார் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்கின்றனர். அப்படி நடவடிக்கை எடுக்காமல் விட்டதன் விளைவே மருத்துவமனைக்குள் புகுந்து தாக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளார்கள் வாணியம்பாடி ரவுடிகள்.