கேரளாவில் பிரபல நகைக்கடையில் ஊழியரை கட்டிப்போட்டுவிட்டு 3.50 கிலோ தங்க நகைகள், முப்பது லட்ச ரூபாய் ரொக்கத்துடன் தப்பி ஓடிய மஹாராஷ்டிரா கொள்ளை கும்பலை சேலம் காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
கேரளாவில் உள்ள பத்தனம்திட்டா நகரின் மையப் பகுதியில் பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது. நேற்று (ஜூலை 28) ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடைக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. ஆனாலும், முக்கியமான வாடிக்கையாளர் ஒருவர், அவசரமாக நகைகள் வேண்டும் என்று கேட்டதால், கடை ஊழியர்களான சந்தோஷ், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த அக்ஷய்பட்டேல் ஆகிய இருவரையும் கடை உரிமையாளர் அழைத்தார்.

அக்ஷய்பட்டேலிடம் கடையின் சாவியையும், சந்தோஷிடம் நகைகள் உள்ள லாக்கரின் சாவியையும் கொடுத்து அனுப்பினார். நேற்று மாலை 5.30 மணியளவில் முதலில் கடைக்குச் சென்ற அக்ஷய்பட்டேல், கடையை திறந்தார். சிறிது நேரத்தில் சந்தோஷூம் கடைக்கு வந்து சேர்ந்தார். அப்போது நகைகள் கேட்டிருந்த வாடிக்கையாளரும் அங்கே வந்தார். அவருக்கு அக்ஷய்பட்டேல், பல்வேறு மாடல் நகைகளை எடுத்து காண்பித்துக் கொண்டிருந்தார். அப்போது கடையில் நான்கு பேர் நின்று கொண்டிருந்தனர்.

அவர்களும் கடையின் ஊழியர்கள்தான் என்று கருதி, வாடிக்கையாளர் நகைகளை தேர்வு செய்து கொண்டிருந்தார். திடீரென்று கடையின் உள்பகுதியில் இருந்து யாரோ முனகும் சத்தம் கேட்டது. சந்தேகம் அடைந்த வாடிக்கையாளர், அக்ஷய் பட்டேலிடம் அதுபற்றி விசாரித்தார். இதனால் சுதாரித்துக்கொண்ட நான்கு பேரும் அங்கிருந்த சாக்கு மூட்டையுடன் வெளியே ஓடினர்.
அவர்களுடன் அக்ஷய் பட்டேலும் ஓடிவிட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர், அருகில் உள்ள கடைகளில் இருந்தவர்களிடம் விவரத்தைக் கூறினார். அவர்கள் வந்து பார்த்தனர். முனகல் சத்தம் வந்த இடத்திற்குச்சென்று பார்த்தபோது, லாக்கர் அறையில் கடையின் ஊழியர் சந்தோஷ் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தார். கட்டுகளை அவிழ்த்துவிட்டு அவரை ஆசுவாசப்படுத்தினர்.
கடையின் மற்றொரு ஊழியரான அக்ஷய் பட்டேலும், அவருடன் வந்த நான்கு பேரும் சேர்ந்து சந்தோஷை கட்டிப்போட்டுவிட்டு நகை, பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து பத்தனம்திட்டா காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர், பத்தனம்திட்டா பேருந்து நிலையத்தில் இருந்த அக்ஷய் பட்டேலை அதிரடியாக கைது செய்தனர். ஆனால் அவருடைய கூட்டாளிகள் நான்கு பேரும் நகை, பணத்துடன் தப்பி ஓடிவிட்டனர்.

காவல்துறை விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. சம்பவம் நடந்த நகைக்கடையில் அக்ஷய் பட்டேல் முக்கியமான ஊழியராக இருந்துள்ளார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அவர் நகைகளை கொள்ளையடிக்க நீண்ட காலமாக திட்டமிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில்தான், விடுமுறை நாளான நேற்று கடையைத் திறக்க உரிமையாளர் சொன்னதால், இதை சரியான தருணமாக கருதிய அவர் கூட்டாளிகள் நால்வரை கடைக்கு வரவழைத்துள்ளார். அக்ஷய் பட்டேல் மட்டும் விரைவில் சென்று கடையைத் திறந்துள்ளார். அப்போதே தன்னுடன் கூட்டாளிகளையும் அழைத்துச்சென்று கடையின் லாக்கர் அறைக்குள் பதுங்கி இருக்கும்படி சொல்லி இருக்கிறார்.
சந்தோஷ் லாக்கர் சாவியுடன் வந்தபோது, அவரை தாக்கி கை, கால்களை கட்டிப்போட்டுவிட்டு லாக்கரை திறந்து உள்ளே இருந்த நான்கு கிலோ தங்க நகைகள் மற்றும் 30 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை சாக்கு மூட்டையில் போட்டு கட்டியுள்ளனர்.

அவர்கள் தப்பிக்கலாம் என்றிருந்த நேரத்தில்தான் வாடிக்கையாளர் கடைக்கு வந்துள்ளார். கொள்ளை கும்பலும் அக்ஷய் பட்டேலுடன் கடையின் கவுன்டர் பகுதியில் இருந்ததால் வாடிக்கையாளர் அவர்களையும் ஊ-ழியர்களாகவே கருதிவிட்டார். ஆனால் சந்தோஷின் முனகல் சத்தம் கேட்டபோதுதான் வாடிக்கையாளருக்கு அங்கே ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பதை உணர்ந்து, அதுகுறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். அதன்பிறகுதான் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, கொள்ளை கும்பல் கேரளாவில் இருந்து கோவை வழியாக தப்பிச்செல்ல வாய்ப்பு இருப்பதால் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்ட, மாநகர காவல்துறையினரும் உஷார்படுத்தப்பட்டனர். கொள்ளை கும்பல் தப்பிச்செல்ல பயன்படுத்திய காரின் பதிவெண்ணை வைத்து நேற்று இரவு முழுவதும் தீவிர வாகன தணிக்கை நடந்தது.
இந்நிலையில், நள்ளிரவு 1 மணியளவில் சேலம் மாவட்ட மேற்கு எல்லையான சங்ககிரியில் குறிப்பிட்ட பதிவெண் கொண்ட கார் செல்வது குறித்து ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர் கவனித்தனர். அவர்களும் கொள்ளையர்களின் காரை பின்தொடர்ந்து சென்றனர். உடனடியாக மாநகர காவல்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோயில் அருகே அந்த கார் வந்தபோது, அங்கிருந்த சாலை தடுப்புகளின் மீது திடீரென்று கொள்ளையர்கள் ஓட்டி வந்த கார் மோதி நின்றது. அப்போது காரில் இருந்து இறங்கிய கொள்ளயர்களில் ஒருவர், திடீரென்று திருமணிமுத்தாறு பகுதி வழியாக தப்பி ஓடினார். காவல்துறையினர் அவரை துரத்தியபோதும், அவர் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து காருக்குள் இருந்த நான்கு பேரை மட்டும் காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களை கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். அதில், மஹாராஷ்டிரா மாநிலம் சாங்கிலிஹார்டு பகுதியைச் சேர்ந்த கணபதி ஜாதவ் (28), பிரசாத் ஜாதவ் (28), தாதா சாகிப் (23), ஆகாஷ் கரத் (28) என்பது தெரிய வந்தது. தப்பி ஓடியவரை கைது செய்யவும் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது, ''காரில் வந்த அனைவரும் மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். கொள்ளையடித்த பணம், நகைகள் எதுவும் காரில் இல்லை. தப்பி ஓடிய நபரிடம் அவை இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இப்போது பிடிபட்டுள்ள நபர்களிடம் இருந்து 10 தங்க தோடுகளும், சில ஆயிரம் ரொக்கமும் மட்டுமே கைப்பற்றப்பட்டு உள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது,'' என்றனர்.
இதற்கிடையே, இன்று காலை (ஜூலை 29) நெய்க்காரப்பட்டி சுடுகாடு பகுதியில் தப்பியோடிய நிதின் ஜாதவ் பதுங்கியிருப்பது தெரியவந்தது. பொதுமக்கள் அவரைப்பிடித்து கொண்டலாம்பட்டி காவல்துறையினர் வசம் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்த பையில் இருந்து மூன்றரை கிலோ தங்க நகைகளையும், முப்பது லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட நபர்கள் ஏற்கனவே சில இடங்களில் இதுபோல் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து கேரளா மாநில காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. கொள்ளையர்களை மடக்கிப்பிடித்த சேலம் மாநகர காவல்துறையினரை, மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் பாராட்டினார்.