சினிமாவில் பிரபல சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன். இவர் பாஜகவில் இணைந்து அக்கட்சி கூட்டங்களில் பங்கேற்று வரும் நிலையில், கடந்த 30ஆம் தேதி மதுரவாயல் பகுதியில் நடந்த கூட்டத்தில் பேசிய கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு எதிரே இருக்கக்கூடிய பெரியார் சிலை குறித்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு விவாதிக்கப்பட்டு வந்தது.
திராவிடர் கழகம் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகியோர் தரப்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அந்த புகாரின் அடிப்படையில் சென்னை சைபர் கிரைம் போலீசார் கனல் கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். கலகம் செய்யத் தூண்டுதல், அவதூறு செய்தி மூலம் பொதுமக்களிடையே விரோதத்தைத் தூண்டுவது ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ''யூடியூப் சேனல் ஒன்றில் ஒருவர் சிவபெருமானை அவமானப்படுத்துகிறார், அசிங்கப்படுத்துகிறார். தில்லை நடராஜர் உடைய நடனத்தை கேலி கிண்டல் செய்கிறார். இதுதொடர்பாக பாஜகவினர் 42 இடங்களில் புகார் கொடுத்துள்ளனர். ஒரு இடத்திலும் புகாரை வாங்கவில்லை. உச்சபட்சமாக அதிக சைவ மக்கள் இருக்கும் தமிழ்நாட்டில் சிவபெருமானை அவமதித்துவிட்டு பத்திரிகையாளர் என்ற போர்வையில் இருக்கிறார்கள். முதல்வரும் அவர்களைச் சந்தித்துப் போட்டோ எல்லாம் எடுத்து அனுப்பி வைக்கிறார். அதைக் கருத்துச் சுதந்திரமென்று சொல்றிங்க. ஆனால் கனல் கண்ணன் ஒரு வார்த்தையைச் சொல்கிறார். உடனே 10 போலீசார் அவரது வீட்டில்.
கருத்துச் சுதந்திரம் என்று சொல்லும்பொழுது திமுகக்காரர்கள் மேடையில் பேசும் எவ்வளவோ வீடியோக்களை காட்டுகிறேன். கனல் கண்ணன் பேசியது பெரிய தப்பு என்றால் இவர்கள் பேசியது எல்லாம் பெரிய பாவம். மாநில அரசின் செயல்பாடு இதில் சரியாக இருக்க வேண்டும். ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வெளியே அந்த சிலை இருக்க வேண்டுமா என 1000 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தினால் 1000 பேரும் இருக்கக் கூடாது என்றுதான் சொல்வார்கள். பொது இடங்களில் இந்த சிலையை வைத்திருக்கலாம். மக்கள் கடவுளை நம்பி வரும் இடத்தில் அந்த சிலை தேவையா? இதைத்தான் கனல் கண்ணன் பேசிய பேச்சாகப் பார்க்கிறேன்'' என்றார்.