சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிச் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட 4500-க்கும் மேற்பட்டோர் தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணி நிரவல் செய்யப்பட்டனர். இந்நிலையில் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் மூன்றாண்டு ஒப்பந்த காலம் விரைவில் முடிவடைகிறது.
இந்தநிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக பணி நிரவல் ஊழியர்கள் நலச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது. தலைவர் குமரவேல் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் ஏ பன்னீர்செல்வம் நிர்வாகிகள் யாதவ சிங் கோவிந்தராஜ் வேல்ராஜ் சோழன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையை தமிழக அரசின் மருத்துவக் கல்லூரியாக அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி மூன்றாண்டுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போது அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் பல்கலைக்கழக சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் பல்வேறு இன்னல்களுக்கிடையே பணியாற்றி வருகிறார்கள். அதனால் 3 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களின் பணி ஒப்பந்தத்தை நீட்டிக்க கூடாது. அவர்களை மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கே அழைத்துக் கொள்ள வேண்டும். பணி நிரவலால் மன உளைச்சல் அடைந்து உயிரிழந்த குடும்பங்களுக்கு ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலையும் நிவாரணமும் அரசு வழங்க வேண்டும்.
இதுகுறித்து பணி நிரவல் ஊழியர்கள் நலச்சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதால் அவர்களுக்கு பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். அதனால் தமிழக அரசு அவர்களது பணிக்கால ஒப்பந்தத்தை மீண்டும் நீட்டிக்காமல் 3 ஆண்டுகள் முடிவடைந்தவுடன் பல்கலைக்கழகத்திற்கே திருப்பி அழைத்துக் கொள்ள வேண்டும் எனவும், இதுபற்றி அரசுக்கு கோரிக்கை வைத்திருப்பதாகவும் கூறும் நிர்வாகிகள் அரசு இதைச் செய்யத் தவறினால் அடுத்த கட்டமாக சங்கத்தின் செயற்குழுவை கூட்டி அடுத்த கட்ட நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும் என கூறினார்.