டெல்டா ப்ளஸ் கரோனா வைரஸ் பாதிப்பு தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து சகஜ நிலையை அடைந்துவிட்டனர். இதனால் அந்தப் பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என தமிழ்நாடு மருத்துவதுறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு மருத்துவதுறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ''முதல் டெல்டா ப்ளஸ் வைரஸ் வந்ததும் அப்போதிருந்தே கண்காணிக்க தொடங்கினோம். ஒரு செவிலியருக்கு வந்தது. அவர் சார்ந்த, அவர் தொடர்புடைய அனைவருக்குமே பரிசோதனை எடுக்கப்பட்டது. எல்லோருக்குமே நெகட்டிவ் என வந்துள்ளது. யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. எனவே டெல்டா ப்ளஸ் வைரஸ் பெரிய அளவில் பரவவில்லை. ஆனாலும் கூட பாதுகாப்பாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகிறோம்.
நேற்று (25.06.2021) டெல்டா ப்ளஸ் கரோனா பாதிக்கப்பட்டதாக வந்த ஒன்பது பேரின் இல்லங்களிலும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களுடன் தொடர்புடையவர்களையும் கண்காணித்துவருகிறோம். எந்த வகையிலும் பயம் வேண்டாம். அதேபோல் அவர்கள் குணமடைந்து சகஜ நிலைக்குத் திரும்பியதால் அந்தப் பகுதியைக் கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இனி யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டால் அந்தப் பகுதியை கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கலாம்'' என்றார்.