தருமபுரி மாவட்டம், மொரப்பூரில் நாம் தமிழர் கட்சியினருக்கும், திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தின்போது முதலமைச்சர் குறித்து நாம் தமிழர் கட்சியினர் அவதூறாகப் பேசியதாக திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை விடுதலை செய்ய வலியுறுத்தியும், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர், தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோரை நாம் தமிழர் கட்சியினர் அவதூறாகப் பேசியதாக திமுகவினர் கூறுகின்றனர்.
இதையடுத்து, திமுகவின் மொரப்பூர் ஒன்றியச் செயலாளர் உள்ளிட்டோர் மேடையில் ஏறி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட நிலையில், ஆர்ப்பாட்டம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக, மொரப்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.