விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நேற்று மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணை பொதுச்செயலாளர் பொன்முடி, மாவட்ட செயலாளர் புகழேந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய பொன்முடி,
''திமுகவில் காலில் விழுந்து எல்லாம் முதல்வராக முடியாது. திமுக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார். அப்படி நீட் தேர்வை ரத்து செய்தால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்தாகும் என இங்குள்ள அமைச்சர் கூறுவது வேடிக்கையாக உள்ளது. ஸ்டாலின் மீது குறை கூறுவதை மட்டுமே ஆளுங்கட்சியினர்கள் கொள்கையாக வைத்துள்ளனர். திமுக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு நீக்கப்பட்டு நிச்சயமாக மருத்துவ படிப்பிற்கு பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் சீட்டு வழங்குவதோடு, அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடும் தொடரும்.
அரசியலுக்குள் குடும்ப வாரிசுகள் யார் வேண்டுமானாலும் வரலாம். அவர்கள் அரசியல் பிடிப்போடும், கட்சியின் கொள்கை பிடிப்போடும், மக்களுக்கான பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு செயல்படுகிறார்களா என்பதுதான் முக்கியம். உதயநிதி ஸ்டாலின் தற்போது அது போன்ற கொள்கை பிடிப்போடு உள்ளார். அதனடிப்படையில் கட்சியின் கொள்கைகளை கடைப்பிடித்து பிரச்சாரம் செய்து வருகிறார். திமுகவில் காலில் விழுந்து எல்லாம் முதல்வர் ஆகிவிட முடியாது. இந்தக் கட்சியில் உழைப்பவர்களின் நியாயமான வளர்ச்சியை கொண்டுதான் தலைமை முடிவு எடுக்கும். விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எந்தவிதமான மக்கள் நலப் பணிகளும் நடைபெறவில்லை. விழுப்புரத்தில் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தவில்லை. புதிய பஸ் நிலையத்தில் கழிவுநீர் வெளியேற வழியில்லை. நகரம் விரிவாக்கம் செய்யப்பட்டபிறகு அப்பகுதிகளில் சாலை வசதி இல்லை. மரக்காணத்தில் துறைமுகம் கொண்டு வருவதாக கூறப்பட்டது. அதுவும் வரவில்லை. அதேபோன்று விழுப்புரம் பகுதியில் தொழிற்சாலை உள்ளிட்ட எந்த வளர்ச்சித் திட்டங்களும் அதிமுக ஆட்சியில் நடைபெறவில்லை. எனவே இந்த ஆட்சியை தமிழக மக்கள் நிராகரிக்கப் போகிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வராக்க தயாராக உள்ளனர்'' என்றார்.