திமுக எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியத்துக்கு எதிராக அளித்த நில அபகரிப்பு புகார் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் புகார் மீது எடுத்த நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய சிட்கோ பொது மேலாளர் முருகேசனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை திமுக எம்.எல்.ஏ.வும், சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயருமான மா.சுப்ரமணியன் அபகரித்து, தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு சட்டவிரோதமாக பெயர் மாற்றம் செய்துள்ளதாக சைதாப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் காவல்துறையில் அளித்த புகாரில், சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் மா.சுப்ரமணியனிடம் உள்ள நிலத்தை மீட்க வேண்டுமென சிட்கோ பொதுமேலாளரிடம் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை என பார்த்திபன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பார்த்திபன் அளித்த புகாரில் சட்டத்திற்கு உட்பட்டு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க பொது மேலாளருக்கு 2019, பிப்ரவரி 21- ஆம் தேதி உத்தரவிட்டது. ஆனால் அந்தப் புகார் மீது 11 மாதங்களாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என சிட்கோ பொது மேலாளர் முருகேசன் என்பவருக்கு எதிராக பார்த்திபன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு இன்று (11/02/2020) நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பார்த்திபன் புகார் மீது எடுத்த நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய சிட்கோ பொது மேலாளர் முருகேசனுக்கு உத்தரவிட்டு வழக்கை மார்ச் 23- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.