சேலத்தில் உள்ள அங்கம்மாள் காலனியில் 23 குடும்பங்கள் குடியிருந்த நிலத்தை அபகரிக்க முயன்றதாகவும், அந்நிலத்தை விற்க மறுத்ததால், அங்கிருப்பவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தாகவும் டி.கணேசன் என்பவர் 2008- ஆம் ஆண்டு வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் அளித்தார். அதை வாங்க மறுத்ததால் காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் 2011- ஆம் ஆண்டு ஜூலை மாதம் சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், சேலம் தி.மு.க.வின் முன்னாள் மாவட்டச் செயலாளரான மறைந்த வீரபாண்டி ஆறுமுகம், பாரப்பட்டி சுரேஷ், உதவியாளர் கவுசிக பூபதி லட்சுமணன், எம்.ஏ.டி.கிருஷ்ணசாமி, உலகநம்பி, ஜிம் ராமு, கூல் மகேந்திரன், சித்தானந்தம், பெட்டிக்கடை கனகராஜ், கரிக்கடை பெருமாள், ஆய்வாளர் எஸ்.லக்ஷ்மணன், வருவாய் கோட்டாட்சியர் வி.பாலகுருமூர்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், வீரபாண்டி ஆறுமுகம் காலமானதைத் தொடர்ந்து, தங்களுக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி பாரப்பட்டி சுரேஷ் உள்ளிட்ட 11 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் புகார்தாரருடன் சமரசம் ஏற்பட்டுவிட்டதால் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. புகார்தாரர் கணேசன் தரப்பிலும் சமரசம் ஏற்பட்டுவிட்டதாகவும், 2008-ல் ஆர்.டி.ஓ.-விடம் புகார் அளித்தபோது பெறவில்லை என்ற குற்றச்சாட்டு உண்மையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு விளக்கத்தையும் ஏற்றுக்கொண்ட நீதிபதி 11 பேர் மீதான வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.