Skip to main content

"ஆ.ராசா நாளை மாலைக்குள் விளக்கம் அளிக்கவேண்டும்; இல்லையேல்..." - தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 30/03/2021 | Edited on 30/03/2021

 

dmk party leader and mp raja election commission notice

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அ.தி.மு.க.. தி.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க., பா.ஜ.க., பா.ம.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தேசிய தலைவர்களும் தமிழகத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 

அந்த வகையில், சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர். எழிலனை ஆதரித்து கடந்த மார்ச் 26- ஆம் தேதி அன்று தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு விளக்கம் அளித்த ஆ.ராசா, “நான் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை, நான் பேசியதை வெட்டி ஒட்டி பரப்பி வருகிறார்கள்" என்று தெரிவித்திருந்தார். 

 

அதைத் தொடர்ந்து, மார்ச் 28- ஆம் தேதி அன்று சென்னை திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டபோது, “என் தாயை இழிவுபடுத்துகிறார்கள்” என்று தழுதழுத்த குரலில் பேசினார். இந்நிலையில் மார்ச் 29- ஆம் தேதி அன்று நீலகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆ.ராசா, “தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் என்ற அரசியல் ஆளுமையையும், முதல்வர் பழனிசாமி என்ற அரசியல் ஆளுமையையும் குழந்தைகளாக உருவகப்படுத்தி உவமானமாக நான் தேர்தல் பரப்புரையில் பேசியிருந்தேன். அதில் இருந்து சில வரிகளை மட்டும் எடுத்து திட்டமிட்டு உள்நோக்கத்தோடு அரசியல் காரணங்களுக்காக, சித்தரிக்கப்பட்டு தவறாகப் பரப்பியதை நான் விளக்கினேன். அது குறித்த விவாதங்கள் தொடர்ந்ததால், மார்ச் 28- ஆம் தேதி அன்று கூடலூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது எடப்பாடி பழனிசாமி குறித்தோ அவரது அம்மையார் குறித்தும் கலங்கம் விளைவிக்க எண்ணியதில்லை என்றும், இரு அரசியல் ஆளுமை குறித்து தான் விமர்சித்தேன் என்றும், நானும் ஒரு தாயின் எட்டாவது பிள்ளை என்கிற உணர்வோடு மீண்டும் விளக்கமளித்திருந்தேன்.

 

இதற்குப் பின்னரும் முதல்வர் எனது பேச்சால் காயப்பட்டு கலங்கினார் என்ற செய்தியை, செய்தித்தாள்கள் வாயிலாகப் படித்தேன். அதனால், மிகுந்த மன வேதனை அடைந்தேன். இடப்பொருத்தமற்று சித்தரிக்கபட்டு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட என் பேச்சுக்காக எனது அடிமனதில் இருந்து எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் ஒரு படி மேலே போய்ச் சொன்னால் முதல்வர் அரசியலுக்காக அல்லாமல் உள்ளபடியே காயப்பட்டிருப்பதாக உணருவாரேயானால் எனது மனம் திறந்த மன்னிப்பைக் கோர சிறிதும் எந்தவிதத் தயக்கமும் இல்லை. முதல்வருக்கும், கட்சியினருக்கும், நடுநிலையாளர்களுக்கும் நான் மீண்டும் குறிப்பிட விரும்புவது எனது பேச்சு இரண்டு தலைவர்களைப் பற்றிய தனி மனித விமர்சனங்கள் அல்ல, பொது வாழ்வில் உள்ள இரண்டு அரசியல் ஆளுமையில் உள்ள மதிப்பீடும், ஒப்பீடும் தான். முதல்வர் காயப்பட்டு கலங்கியதற்காக எனது மனம் திறந்த மன்னிப்பைக் கேட்கும் அதே வேளையில் ஒரு கருத்தை வெளியிட விரும்புகிறேன்.

 

என் மீது தொடுக்கப்பட்ட 2ஜி வழக்கை விசாரித்த நீதிபதி ஷைனி தன் தீர்ப்பின் கடைசிப் பக்கத்தில் இந்த வழக்கு எப்படிப் புனையப்பட்டது என்பதை நான்கு வார்த்தைகளால் முடித்தார். அது கோப்புகளை தவறாகப் படித்ததாலும், தேர்ந்த சிலவற்றை மட்டும் படித்ததாலும், சிலவற்றைப் படிக்காமல் விட்டதாலும், இடப் பொருத்தமற்று சில கோப்புகளை படித்ததாலும் புனையப்பட்டு தொடுத்த வழக்கு தான் இந்த 2ஜி வழக்கு என்று தீர்ப்பளித்தார். எனது (பிரச்சாரத்தில்) 40 நிமிட உரையை முழுவதுமாகக் கேட்டால் தமிழக மக்களும் ஷைனி வழங்கிய தீர்ப்பையே வழங்குவார்கள்” என நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

 

cnc

 

இதனிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, "தமிழக முதல்வர் குறித்த ஆ.ராசாவின் சர்ச்சைப் பேச்சு பற்றி தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தனிநபர் விமர்சனம் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்பதால் அறிக்கை அனுப்பியுள்ளோம். மாவட்டத் தேர்தல் அதிகாரி, எஸ்.பி. தந்த தகவலின் அடிப்படையில் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்" எனத் தெரிவித்திருந்தார். 

 

அதன் தொடர்ச்சியாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் ஆ.ராசாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், 'முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக ஆ.ராசா நாளை (31/03/2021) மாலை 06.00 மணிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும். விளக்கம் அளிக்காத பட்சத்தில் அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

 

சார்ந்த செய்திகள்