ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி தருவது குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (26/04/2021) காலை 09.15 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட்டைத் திறக்க திமுக, காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கூட்டத்தில் ஒருமித்த ஆதரவைத் தெரிவித்துள்ளனர். மேலும், ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தற்காலிக அனுமதி வழங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அனைத்து கட்சிக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த திமுகவின் மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி., "ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும். ஆக்சிஜன் தயாரிப்பதற்காக தற்காலிகமாக தமிழக அரசே மின்சாரம் வழங்க வேண்டும். ஆலையில் ஆக்சிஜன் தவிர வேறு எந்த உற்பத்தியையும் மேற்கொள்ளக் கூடாது. ஆக்சிஜன் உற்பத்தியைக் காரணம் காட்டி தொடர்ந்து ஆலை செயல்பட அனுமதி கேட்கக் கூடாது. மாவட்ட, மாநில அளவில் குழு அமைத்து ஆக்சிஜன் உற்பத்தியைக் கண்காணிக்க வேண்டும். ஆக்சிஜன் தயாரிப்பிற்காக மட்டும், ஸ்டெர்லைட் தொழில்நுட்ப வல்லுநர்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். நான்கு மாதங்களுக்குப் பிறகு தேவைப்பட்டால் மறுபரிசீலனை செய்யலாம். தேவையில்லை எனில், ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட வேண்டும்" என்றார்.