கள்ளக்குறிச்சி மாவட்டம், வடக்கநந்தல் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில், திமுக, அதிமுக உட்பட பல்வேறு கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் இரண்டு வார்டுகளில் அதிமுகவினர் வேட்புமனுக்கள் முறையாக தயாரித்து தாக்கல் செய்யாததால் அவர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும், ஐந்து அதிமுக வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதன்மூலம் 7 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மொத்தமுள்ள 18 வார்டுகளில் 7 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டதால், மீதமுள்ள 11 வார்டுகளுக்கு மட்டுமே 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் பத்து வார்டுகளில் வெற்றி பெறும் கட்சி பேரூராட்சித் தலைவர் பதவியை பெற முடியும் என்ற நிலையில் உள்ளது. போட்டி நடைபெற உள்ள 11 வார்டுகளில் 10 வார்டுகளை அதிமுக கைப்பற்றினால் தான் அந்தக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் பேரூராட்சித் தலைவராக முடியும். அதேசமயம், ஏற்கனவே 7 இடங்களை கைப்பற்றிய திமுக, இன்னும் மூன்று இடங்களை மட்டும் வென்றால்கூட அந்தக் கட்சியில் இருந்து ஒருவர் சுலபமாக தலைவர் பதவியை பெற்றுவிடுவார் என்கின்றனர் அப்பகுதி வாக்காளர்கள்.
மேலும், அப்பகுதி திமுகவினர், போட்டி நடைபெறும் 11 வார்டுகளில் குறைந்தபட்சம் 7 முதல் 8 வார்டுகளில் திமுக வெற்றி பெறும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார்கள். இந்தநிலையில் அதிமுகவினர் மத்தியில் மிகப்பெரிய சோர்வு ஏற்பட்டுள்ளது. அதிகப்படியான செலவு செய்து வெற்றி பெற்றாலும்கூட தலைவர் பதவியை பெற முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.
அதிமுகவின் முன்னாள் மாவட்டச் செயலாளராகவும் அமைச்சராகவும் இருந்தவர் மோகன். தற்போது, குமரகுரு என்பவர் மாவட்டச் செயலாளராக உள்ளார். தனது கட்டுப்பாட்டில் உள்ள வடக்கநந்தல் பேரூராட்சியில் அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனுவை வாபஸ் பெறும் நிலையில் கட்சி நடத்தி வருகிறார் குமரகுரு என்ற குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள் அதிமுக தொண்டர்கள்.
சங்கராபுரம் திமுக எம்.எல்.ஏ.வும் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளருமான உதயசூரியனின் சொந்த ஊர் வடக்கநந்தல் என்பதால், திமுக சார்பாக பேரூராட்சி தலைவர் பதவிக்காக அவரை திமுகவினர் சுற்றிவருகிறார்கள் என்கின்றனர் ஊர் மக்கள்.