"எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில்கொண்டு, சீட் பேரம் பேசுவதற்காக இட ஒதுக்கீடு போராட்டம் என்ற நாடகத்தை ராமதாஸ் அரங்கேற்றியிருப்பதை வன்னியர்கள் நன்கு அறிவர். வன்னியர்கள் ஒருபோதும் ஏமாறமாட்டார்கள்" என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
கடலூர் மாவட்ட கிழக்கு மாவட்டச் செயலாளரும், குறிஞ்சிப்பாடி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிதம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். மக்கள் கிராம சபைக் கூட்டம் மூலம் தமிழக மக்களிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இது எங்களுக்கு மிகப்பெரிய பலத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டபேரவைத்தொகுதி தேர்தல் உள்ளிட்ட 234 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெறும்.
பாமக நிறுவனர் ராமதாஸ், வன்னியர்களின் நம்பிக்கையை இழந்த நிலையில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பது ஒரு தேர்தல் நாடகம் என்பதையும், பேரம் பேசுவதற்காகவே இப்போராட்டத்தைக் கையிலெடுத்திருக்கிறார் என்பதையும் வன்னியர்கள் நன்கு அறிவர். எனவே அவர்கள் ஒருபோதும் ஏமாறமாட்டார்கள். வன்னிய சமுதாயத்தினருக்கு அதிக பலன்களையும், நன்மைகளையும் திமுக தான் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. பல ஆயிரக்கணக்கான வன்னியர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ததோடு, இட ஒதுக்கீடு போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த 21 பேரின் குடும்பங்களுக்கு திமுக ஆட்சியில் தான் ரூ.3 லட்சம் இழப்பீடு மற்றும் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. வன்னியர் சங்க முன்னாள் தலைவர் காடுவெட்டிக் குரு மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ததும் திமுக ஆட்சியில் தான் என்றார்.