கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் அசோக் ஆனந்த் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் அந்தத் தொகுதி காலியானது.
அதையடுத்து கடந்த மக்களவைத் தேர்தலுடன் தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த இடைத்தேர்தலில் 28 ஆண்டுகளாக என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வசம் இருந்த தொகுதியை காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்ட திமுக கைப்பற்றியது. திமுக சார்பில் போட்டியிட்ட வெங்கடேசன் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் புதுச்சேரி சட்டசபையில் இன்று தட்டாஞ்சாவடி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் பதவி பிரமாணம் எடுத்து கொண்டார். துணை சபாநாயகர் சிவக்கொழுந்து சட்டமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த சட்டமன்ற பதவி பிரமாணத்தில் முதல்வர் நாராயணசாமி, சட்டப்பேரவை செயலாளர் வின்சென்ட் ராயர், தி.மு.க தெற்கு அமைப்பாளர் மற்றும் உருளையன்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் சிவா, வடக்கு திமுக அமைப்பாளர் சிவக்குமார், திமுக கட்சியின் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு, திமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனுக்கு சால்வைகள் அணிவித்து வாழ்த்துக்கள் கூறினார்கள். மேலும் இந்த பதவி ஏற்பு விழாவில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், டெல்லி பிரதிநிதி ஜான் குமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.