திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்து கொண்டு பேசும்போது, "தமிழர்களின் கலாச்சாரம், வரலாறு மற்றும் பண்பாடு ஆகியவற்றை உலகறியச் செய்தது நமது தாய்மொழியான தமிழ் மொழி தான். இந்த தமிழ் மொழியை நாம் போற்ற வேண்டும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே பிராந்திய மொழிகளில் வாதாடவும் தீர்ப்பு வழங்கவும் வேண்டும் எனக் கூறியதால் தாய்மொழியாம் தமிழ் மொழிக்கு மகுடம் சூட்டிக் கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் என்பதற்கு இதுவே சான்று.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக கிராமப்புறச் சாலைகள் எதுவும் முழுவதுமாக அமையவில்லை. ஆனால் தற்போது தமிழக முதல்வர் இந்த வருடத்தில் பத்தாயிரம் கிலோமீட்டர் கிராமப்புற சாலைகளை அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கென தனித் துறையை உருவாக்கியவர் கலைஞர். தமிழுக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது அதேபோல் திமுக இருக்கும் வரை தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முடியாது.தமிழுக்குத் தனித் துறையை உருவாக்கி அதற்கு ஒரு அமைச்சரையும் நியமித்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர். இந்தியாவை பாஜக 8 வருடங்களாக ஆண்டு வருகிறது ஆனால் விலைவாசி உயர்வைத் தவிர வேறொன்றும் செய்ததில்லை கேஸ், பெட்ரோல் போன்ற அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் வருடத்திற்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாக மோடி கூறினார். ஆனால் தற்போது வரை இந்தியாவில் 12 கோடி பேர் தமது வேலைகளை இழந்து உள்ளனர்.
இந்தியாவில் தமிழகத்தில் தான் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வந்தனர். தற்போது இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதல் முறையாக பள்ளிகளில் மாணவ மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார். கிராமப்புற தொடக்கப் பள்ளிகளில் கட்டிட வசதி இல்லாமல் இடியும் தருவாயில் இருப்பதால் தமிழக முதலமைச்சர் இதனை உணர்ந்து நமது கிராம குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இருப்பதற்காக சுமார் 800 கோடி அளவில் தொடக்கப் பள்ளிகளின் கட்டிடங்களைக் கட்ட நிதியை ஒதுக்கி உள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் குடமுழுக்கு செய்வதற்காக முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு கடந்த திமுக ஆட்சியில் தான் பட்டாவே கொடுத்தோம். அதுபோல் திருச்செந்தூர் கோவிலுக்கும் பட்டா கொடுத்திருக்கிறோம். திண்டுக்கல் மாநகரில் பல பகுதிகளிலும் ஆயிரக்கணக்கானோருக்கு பட்டா வழங்கியிருக்கிறோம் அதுபோல் கூடிய விரைவில் காவிரியில் இருந்து கூட்டு குடிநீர் திட்ட மூலம் கூடுதல் தண்ணீரும் திண்டுக்கல் நகருக்கு கொண்டு வர இருக்கிறோம் அது போல் வைகை டேமிலிருந்தும் இருந்தும் திண்டுக்கல் மாநகருக்கு குடிநீர் கொண்டு வர இருப்பதால் திண்டுக்கல் மாநகரில் குடிநீர் பிரச்சனையே இல்லாத அளவுக்கு நிரந்தர தீர்வு கொண்டு வரப்படும்" என்று கூறினார்.
கூட்டத்துக்கு மாணவர் அணி அமைப்பாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் மேயர் இளமதி. துணை மேயர் ராஜப்பா. மாவட்ட துணை செயலாளர் நாகராஜ். வர்த்தக அணி மாநில இணை செயலாளர் ஜெயின் .ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன். மற்றும் மாநகர பகுதி செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.