சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தினர். இதில் குழந்தைகள், பெண்கள் என பலர் கலந்துகொண்டனர். அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தைக் கைவிடும் படி எச்சரித்தனர். போராட்டக்காரர்கள் இதற்கு செவிகொடுக்கவில்லை. இதையடுத்து போலீஸ் தடியடி நடத்தி போராட்டத்தை கலைக்க முயன்றனர். இவ்வாறு தடியடி நடத்தியதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி, சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டத்தை போலீஸ் உரிய முறையில் கையாளவில்லை என்றும் காவல் இணை ஆணையர் நிலைமையை தவறாக கையாண்டதால் வன்முறை ஏற்பட்டது என தெரிவித்தார். மேலும் போராட்டத்தை உரிய முறையில் கையாண்டு இருந்தால் மக்கள் மீதான வன்முறையை தவிர்த்திருக்கலாம் என்று கூறிய அவர் வண்ணாரப்பேட்டை போராட்டம் குறித்து விசாரணைக்கு உத்திரவிட வேண்டும் என்று தெரிவித்தார்.