திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நான்கு முனை சந்திப்பு காவல்நிலையம் எதிரே 'தளபதி ஆட்டோ நலச் சங்கம்' என்ற பெயரில் திமுக சார்பில் தொழிற்சங்க கொடிக்கம்பம் மற்றும் சங்கப் பலகை நேற்று முன்தினம் வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை இந்த கொடிக்கம்பமும் சங்கப்பலகை அகற்றப்பட்டு இருப்பதை கண்டு திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான திமுகவினர் திரண்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கொடிக்கம்பம் மற்றும் சங்கப்பலகை அகற்றப்பட்டதை கண்டித்து நிலக்கோட்டை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், வடக்கு ஒன்றிய செயலாளர் சௌந்தரபாண்டியன், நகரச் செயலாளர் கதிரேசன், ஆட்டோ சங்க கௌவரவத் தலைவர் செல்லப்பாண்டி உள்ளிட்ட திமுகவினர் மற்றும் ஆட்டோ சங்கத்தினர் நிலக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டிஎஸ்பி முருகனை சந்தித்து ஏற்கனவே பல ஆண்டுகளாக அந்த இடத்தில் திமுக கொடி கம்பம் இருந்ததாகவும் தேர்தல் நேரத்தில் அகற்றிய பின் தற்போது புதிதாக கொடிக்கம்பம் மற்றும் பலகையை அமைந்திருப்பதாகவும் நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் வேண்டுமென்றே யாருடைய தூண்டுதலின் பேரில் திமுக கொடி கம்பம் மட்டும் பலகையை அகற்றி எடுத்துச்சென்று விட்டதாகவும் அப்பகுதியில் அனைத்து கட்சிக்கொடி கம்பங்கள் மற்றும் சங்கப் பலகைகள் இருக்கும்போது திமுக கொடி கம்பத்தை மட்டும் தன்னிச்சையாக அகற்றிய சங்கரேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு கொடுத்தனர்.
டிஎஸ்பி முருகன் திமுகவினரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். பின்பு அங்கிருந்து திமுகவினர் மீண்டும் அதே இடத்தில் திமுக புதிய கொடிகம்பம் மற்றும் ஆட்டோ சங்க பலகையை மீண்டும் நிறுவி விட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.