
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி தமிழக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.
அண்மையில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவானது விரைவில் மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. வக்பு வாரியம் தனிப்பட்ட முறையில் தங்களுடைய சொத்துக்களை கணக்கிட முடியாது; வக்பு வாரியம் ஒரு சொத்தை உரிமைகோரும் பொழுது அது அரசின் சொத்தாக இருந்தால் குறிப்பிட்ட மாவட்ட ஆட்சியர் மூலமாக அது அரசின் சொத்தாக வகைமாற்றம் செய்ய முடியும் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை கொண்டு வக்பு வாரிய சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனை பல்வேறு மாநிலங்கள் எதிர்த்து வருகின்றன. குறிப்பாக கேரளா, கர்நாடகா மாநில சட்டப் பேரவைகளில் இதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், தமிழக சட்டப்பேரவையிலும் இன்று வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து தீர்மானம் கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த சிறப்பு தீர்மானத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்துள்ளார். இந்த தீர்மானத்தை அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ள நிலையில் பாஜக தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்துள்ளது.

வெளிநடப்பு செய்த பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவசன் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், ''மத்திய அரசு உங்களுக்கு (திமுக எம்பிகளுக்கு) நாடாளுமண்டத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வாய்ப்பு கொடுத்தது. கூட்டுக் குழுவிடம் உங்கள் பிரதிநிதிகள் கருத்துக்களை தெரிவித்தனர். மாநில சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுகவின் அரசுக்கு ஒரு அதிகார வரம்பு இருக்கிறது.
சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுக்கு எப்படி அதிகாரம் இருக்கிறதோ அதுபோல மத்தியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜகவின் அரசுக்கும் சட்டம் இயற்ற அதிகாரம் இருக்கிறது. தமிழக அரசு ஒரு சட்டத்தை கொண்டு வருகின்ற பொழுது தமிழகத்தில் இருக்கின்ற ஏதாவது ஒரு மாநகராட்சி, ஒரு பஞ்சாயத்து அதை எதிர்த்து தீர்மான போட்டால் எப்படி இருக்குமோ? அதுபோன்ற சூழல் ஏற்பட்டு விடக்கூடாது. ஏனென்றால் தமிழகத்தினுடைய சட்டப்பேரவைக்கு ஒரு நீண்ட பாரம்பரியமும் பெருமையும் இருக்கிறது. அதை இவர்களுடைய அரசியலுக்காக, தங்களுடைய செயலின் காரணமாக அந்த மாண்பை குறைத்து விடக்கூடாது என என்னுடைய கருத்தை நான் வலியுறுத்தி இருக்கிறேன்'' என்றார்.