திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுக்கா, புங்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன், 54 வயதான ஆறுமுகம். சாராயம் விற்பனையை கடந்த பல வருடங்களாகச் செய்து வருகிறார். போளூர் காவல்நிலைய போலீஸார், சாராயம் விற்பனை தொடர்பாக பலமுறை வழக்குப் பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஆனால், வெளியில் வந்து மீண்டும் சாராயம் விற்பனை செய்து வந்தார்.
இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுக்கா, செங்குணம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலையின் மனைவி 47 வயதான சரஸ்வதியும், சாராயம் விற்பனை செய்து வந்தார். இதுதொடர்பாக புகார் வரப்பெற்று ஆரணி கிராமிய காவல்நிலைய அதிகாரிகளால், பலமுறை கைது செய்து சிறையில் அடைத்தாலும், வெளியே ஆட்களை வைத்து சாராயம் விற்பனை செய்துவந்தார். ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் சாராயம் விற்பனை செய்து வந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுக்கா, குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணையன் மகன் 30 வயதேயான விஜயகாந்த். இவர் மீது பலமுறை வழக்குப் பதிவு செய்தும் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டிருந்தவரை கண்ணமங்கலம் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர்கள் மீது பலமுறை வழக்குப் பதிவு செய்தும் சாராயம் விற்பனை செய்யும் தொழிலை விடவில்லை என்பதால் இவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மேற்கண்ட நபர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி, வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களுக்கு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணை வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 9 மாதங்களில் மட்டும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 109 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.