தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை துவங்கிக் கடந்த சில நாட்களாகப் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாது மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் குளம் போல மழை நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. சென்னையின் பல பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் வைத்து மழை நீரை அகற்றி வருகின்றனர்.
இந்நிலையில் வெள்ள நிவாரணப் பணியின் போது தாமதமாக வந்த விசிக கவுன்சிலரை திமுக வட்டச் செயலாளர் ஒருவர் திட்டியதோடு, அடிக்கப் பாய்ந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை அசோக் நகர் 135 வது வார்டு கவுன்சிலர் சாந்தி. இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர். அசோக் நகர் மூன்றாவது அவென்யூ பகுதியில் தேங்கியிருந்த மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் திமுக வட்டச் செயலாளர் செல்வகுமார் என்பவர் அந்தத் தொகுதியின் எம்எல்ஏ மூலம் தொடர்பு கொண்டு மாநகராட்சி அதிகாரிகளை வரவழைத்து வாகனம் மூலம் அங்கு தேங்கி இருந்த நீரை அகற்ற நடவடிக்கை எடுத்தார். அப்பொழுது சம்பவ இடத்திற்கு விசிக கவுன்சிலர் வந்த நிலையில் திமுக வட்டச் செயலாளருக்கும் விசிக கவுன்சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
''காலையிலிருந்து எங்க போயிருந்த... இதெல்லாம் சரி பண்ணாம எங்க போயிருந்த... வசூல் பண்ண போயிருந்தியா... ஓட்டு போட்ட மக்களுக்கு என்ன செஞ்ச...'' என ஆத்திரத்துடன் கேட்டார் திமுக வட்ட செயலாளர். அதற்கு சாந்தி ''சும்மா ஒன்னும் ஓட்டு போடல பணம் கொடுத்ததால் ஓட்டு போட்டார்கள்'' என்றார். இதனால் வாக்குவாதம் முற்றியது. “நாங்கள் மக்கள் காலில் விழுந்து உனக்கு ஓட்டு வாங்கித் தந்தோம்” என்ற திமுக வட்டச் செயலாளர் செல்வகுமார் சாந்தியை அடிக்கப் பாய்ந்தார். அதன் பிறகு அங்கிருந்தவர்கள் செல்வகுமாரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.