நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இடப்பங்கீடு தொடர்பாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் நிர்வாகிகள், காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளனர்.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, "காங்கிரஸ் கட்சிப் போட்டியிட விரும்பும் இடங்களைத் தருவது பற்றிப் பரிசீலிப்பதாக தி.மு.க. உறுதி அளித்துள்ளது. தேர்தலில் இடங்களைப் பெறுவது தொடர்பாக, மாவட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு அல்லது மூன்று தினங்களில் வேட்பாளர்களின் பட்டியல் மாவட்ட அளவிலேயே வெளியிடப்படும். வெற்றி வாய்ப்புள்ள இடங்களைக் கேட்டுப் பெற மாவட்டத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், "வெற்றிப் பெறக் கூடிய இடங்களைக் கேளுங்கள்; வெற்றி வாய்ப்புள்ள இடங்களைத் தருவார்கள் என முதல்வர் கூறினார். வாழ்த்துக் கூறி தேர்தலில் வெற்றிப் பெற அனுப்பியுள்ளார்" எனத் தெரிவித்தார்.