திமுக - காங்கிரஸ் கட்சிக்குத்தான் அடுத்த தேர்தல் வெற்றி: விஜயதாரணி
அ.தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பதவில் செயல்பட இயலாது என அக்கட்சியின் தலைமையகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், புதிய நிர்வாகிகளை நியமிப்பதாக தினகரன் பிறப்பித்த உத்தரவுகள் செல்லாது எனவும் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. எடப்பாடி பழனிசாமி அணியினர் இப்போதுதான் கண் விழித்துள்ளனர் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கூறியுள்ளனர்.
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி கூறுகையில்,
இது அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை. இதில் கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எடப்பாடி என்ற பேனரில் அதிமுக ஆட்சியாக தொடர்கிறார்கள். அதனால் எதிர்க்கட்சிகள் விமர்சிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறோம்.
எடப்பாடி பழனிசாமி அணியினர் இப்போதுதான் கண் விழித்துள்ளனர் என்று கூறுவதால், 18ஆம் தேதி அறிவிக்கப்பட்ட போராட்டத்தை ஓ.பி.எஸ். அணியினர் கைவிட்டுவிடுவார்களா?
ரேசன் கடையை மூடுவது, ஜிஎஸ்டி வரி விலக்கு, விவசாயிகள் கடன் பிரச்சனை, நீட் போன்றவற்றில் இன்று தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றையெல்லாம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து பெற வேண்டிய ஒன்று. இந்த நேரத்தில் மாநில அரசு மக்கள் நலனை கைவிட்டுள்ளது. அதற்கு காரணம் ஆளும் கட்சிக்குள் இருக்கும் பிளவுதான். அதிமுகவில் உள்ள 3 அணியினரும் இணைந்தால்தான் பாஜகவின் தாக்கத்தை குறைக்க முடியும். பிளவுப்பட்டு நிற்பதால் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இவர்களே வாய்ப்பு தருகிறார்கள். இவர்கள் பாஜகவுக்கு அந்த வாய்ப்பை உருவாக்குகிறார்கள்.
திமுக - காங்கிரஸ் கட்சிக்குத்தான் அடுத்த தேர்தல் வெற்றி. இதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் தேர்தல் வரை தற்போது உள்ள ஆட்சியை நடத்தி செல்ல வேண்டிய சூழல் நிலை உள்ளது. அதிமுக அணியினர் ஒவ்வொருவரும் தங்களை பலமில்லாதவர்களாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் மத்திய அரசை எதிர்க்கும் இடத்தில் இவர்கள் யாரும் இல்லை. மக்கள் நலன் கைவிடப்படுவதால், இவர்கள் ஆட்சியில் இருக்க தகுதியற்றவர்களாக பார்க்க வேண்டியுள்ளது. மக்கள் நலனை புறக்கணிக்கக்கூடிய ஆட்சிதான் இங்கு இருக்கிறது. அதிமுகவுக்குள் இருக்கும் பிரச்சனைகளை தீர்த்து ஒரு நல்ல ஆட்சியை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் ஆட்சியில் இருந்து விலக வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
-வே.ராஜவேல்