திருச்சியில் தி.மு.க வட்ட செயலாளரின் வீட்டில் நடைபெற்ற மோதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்த தி.மு.க வட்ட செயலாளர் கண்ணன் என்பவருடைய வீட்டுக்கு நேற்று இரவு சென்ற நான்கு பேர், பகுதி செயலாளர் ராம்குமார் அழைப்பதாகக் கூறி கண்ணனை வெளியே அழைத்து வீட்டின் வாசலில் வைத்து கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயம் அடைந்த கண்ணன் சிகிச்சைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கண்ணன் மற்றும் ராம்குமார் இருவருக்கும் 8 மாதத்திற்கு முன்பு நடந்த தி.மு.க. மாநாட்டுக்கு வேன்களில் தொண்டர்களை அழைத்துச் சென்ற செலவு தொடர்பாகத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று காலை பகுதி செயலாளர் ராம்குமாரை சந்தித்த கண்ணன் வேன் வாடகைக்காக எனது நகையை அடைமானம் வைத்துக் கொடுத்தேன். தற்போது நகை மூழ்கும் நிலையில் உள்ளது. நீங்கள் பணம் கொடுக்காமல் இன்னமும் இழுத்தடித்தால் அமைச்சர் கே.என்.நேருவிடம் நேரில் புகார் தெரிவிப்பேன் என்று கூறியதாகக் கூறப்படுகிறது. அதனால் ஏற்பட்ட பிரச்சினையால் இந்த கத்திக்குத்து சம்பவம் நடந்திருக்கலாம் என்று காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.