தமிழ்நாட்டில் கரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், மாவட்டந்தோறும் அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள் என பலரை அழைத்து வீடு வீடாகச் சென்று அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்வதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன.
அதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள நான்கு கோட்டங்களில் ஒவ்வொரு கோட்டத்திற்கும் சுமார் 40 தன்னார்வலர் பணியாளர்களை அரசு தேர்வு செய்து, அவர்களுக்கு கடந்த மே 31ஆம் தேதி பயிற்சி கொடுத்து ஜூன் ஒன்றாம் தேதி முதல் அவர்கள் பரிசோதனை பணியை செய்துவருகின்றனர். இதில் பொன்மலை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ள 40 பணியாளர்கள் கடந்த ஒருவார காலமாகப் பணியாற்றிவரும் நிலையில் இன்று (05.06.2021) 46வது வார்டு பகுதியில் பரிசோதனை மேற்கொள்வதற்காக சென்றனர்.
அப்போது திமுகவைச் சேர்ந்த வட்டச்செயலாளர் புஷ்பராஜ் என்பவர் தங்களுடைய வார்டு பகுதியில் இருப்பவர்களைப் பணியில் அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி மருத்துவமனை நிர்வாகத்தை நேரில் சென்று மிரட்டியுள்ளார். கடந்த ஒருவார காலமாகப் பணியாற்றிவரும் 40 பணியாளர்களில் பத்து பேரை மருத்துவமனை நிர்வாகம் நீக்கியுள்ளனர். அதற்குப் பதிலாக புஷ்பராஜ் கூறிய பத்து பேரை இணைக்க முயன்றதால் 40 பணியாளர்களும் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒருவார காலத்திற்கு மேலாக இவர்கள் பணியாற்றிவரும் நிலையில் தற்போது 10 பெயரை நீக்கிவிட்டு புதிதாக 10 பேரை சேர்ப்பது என்பது அராஜகப் போக்கைக் காட்டுகிறது என்று பணியாளர்கள் கூறுகின்றனர்.