தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்ற நிலையில், மாவட்ட ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று (22.10.2021) நடைபெறுகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, நடைபெற்றுவரும் மறைமுக தேர்தலில் சில இடங்களில் பரபரப்பு தொற்றியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத் தலைவர் தேர்தலில் திமுகவிலேயே இரண்டு தரப்பினர் போட்டியிடுவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு மோதலுக்குப் பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தேர்தலில் அதிமுகவின் ஆதரவோடு திமுக வேட்பாளர் வென்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய குழு தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் இருந்த 18 இடங்களில் 11 இடங்களில் திமுக வேட்பாளர்களும், 4 இடங்களில் அதிமுகவும், 2 இடங்களில் பாமகவும், 1 இடத்தில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றிருந்தனர். இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் காயத்திரி சுப்பிரமணி என்ற திமுக பெண் வேட்பாளரும், சங்கீதா பாரி என்ற திமுக பெண் வேட்பாளரும் ஒன்றிய குழு தலைவருக்கான தேர்தலில் நின்றனர். 11 திமுக உறுப்பினர்களில் 6 பேர் காயத்திரி சுப்பிரமணிக்கு ஆதரவு தெரிவித்தனர். அதேபோல் சங்கீதா பாரிக்கு 5 திமுக வேட்பாளர்களும், 4 அதிமுக, 2 பாமக, 1 சுயேச்சை என மொத்தம் 12 பேர் ஆதரவு தெரிவித்ததால் சங்கீதா பாரி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.