திமுக, இடதுசாரிகள் கட்சியினர் தமிழ்ச்சமூகத்தின் மீது நடத்திய பண்பாட்டு, கலாச்சார சீரழிவுகள்தான் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு முக்கிய காரணம் என்று இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
இந்து மக்கள் கட்சியின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் சேலத்தில் சனிக்கிழமை (மார்ச் 30, 2019) நடந்தது. அப்போது அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியது:
வரும் மக்களவை தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். தேர்தல் நேரத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பாரபட்சமாக நடந்து கொள்கின்றனர். அவர்கள் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும். பகவான் கிருஷ்ணன், இந்துக்களின் அடையாளம். அவர் இந்து மதத்தின் குறியீடு. அவரைப்பற்றி தி.க. தலைவர் கி.வீரமணி அவதூறாக பேசி வருவது கண்டிக்கத்தக்கது. உடனடியாக காவல்துறையினர் கி.வீரமணியை கைது செய்ய வேண்டும்.
தேர்தல் பரப்புரையின்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்பேன் என்றும், ராகுல்காந்தி ஏழைகளுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்குவேன் என்றும் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். நடைமுறையில் சாத்தியமில்லாத வாக்குறுதிகளை கொடுத்து, வாக்கு சேகரித்து வருகின்றனர். அவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2ஜி ஊழல் பணமும், திமுகவினரின் சாராய ஆலைகளில் இருந்து கிடைக்கும் பணத்தையும் வைத்துக்கொண்டு, ஜனநாயகத்தை பணநாயகமாக மாற்றும் வேலைகளில் இறங்கியுள்ளனர். கோவையில் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். திமுகவினர், அரசியலில் அநாகரிகத்தை கடைபிடிக்கின்றனர். திமுக, திக, இடதுசாரிகள் ஆகியோர் காதலர் தினம் கொண்டாடுவது, தாலி கட்டிக்கொள்ளாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதை ஆதரிப்பது, தாலியைக் கழற்றுவது போன்ற செயல்கள் மூலம் சமூக சீரழிவை ஏற்படுத்துகின்றனர்.
சேலத்தில் கொல்லப்பட்ட ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை வழங்க வேண்டும். அவருடைய உருவப்படத்தை வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்வோம். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு, திமுக மற்றும் இடதுசாரிகள் தமிழ்ச்சமூகத்தின் மீது ஏற்படுத்தி பண்பாட்டு, கலாச்சார சீரழிவுகள்தான் முக்கிய காரணம். கோடநாடு சம்பவத்தில் ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு யார் ஜாமின் கொடுத்தார்கள் என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அம்பலப்படுத்தி இருக்கிறார். இந்த தேர்தலில் திமுக கூட்டணியினருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.இவ்வாறு அர்ஜூன் சம்பத் கூறினார்.