Skip to main content

விவசாய சங்கங்கள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்தில் திமுக பங்கேற்கும் - மு.க.ஸ்டாலின்

Published on 24/01/2018 | Edited on 24/01/2018
விவசாய சங்கங்கள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்தில் திமுக பங்கேற்கும் - மு.க.ஸ்டாலின்

காவிரியில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி விவசாய சங்கங்கள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்தில், விவசாய சங்கத்தினரோடு திமுகவினர் இணைந்து பங்கேற்பர் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காவிரி டெல்டா பகுதிகளில் பால் பிடிக்கும் பருவத்தில் உள்ள நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் மிக மோசமாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியிருப்பதால், தமிழகத்திற்கு 15 டி.எம்.சி. காவிரி நீரை உடனடியாக திறந்து விட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிடவேண்டும் என்று வலியுறுத்தி தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், திருச்சி, கடலூர்  ஆகிய மாவட்டங்களில் 28.1.2018 ஞாயிற்றுகிழமை அன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற இருக்கிறது. இந்த போராட்டத்திற்கு திமுக ஆதரவு தர வேண்டும் என்றும் இன்று (23-1-2017) என்னைச் சந்தித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயிகளின் பாதுகாப்பு இயக்கங்களின் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.

இச்சங்க நிர்வாகிகளின் கோரிக்கையினை ஏற்று, ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் திமுக பங்கேற்பது என்றும்; காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நிர்வாகி மற்றும் கழகத் தோழர்களுடன் இணைந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி விவசாய சங்கங்கள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்