தேமுதிகவின் மாநில அந்தஸ்தை நீக்கும் பணிகளை தேர்தல் ஆணையம் முன்னெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பெறுவதற்கு மாநிலத்தில் அந்த கட்சியானது 6 சதவிகித வாக்குகளை மொத்த வாக்குகளில் பெற்றிருக்க வேண்டும். அதோடு ஒரு மக்களவை தொகுதி மற்றும் இரண்டு சட்ட பேரவை தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி.
கட்சி தொடங்கிய ஓராண்டில் 2006 சட்ட பேரவையில் தனித்து போட்டியிட்ட தேமுதிக 8.38 சதவிகித வாக்குகளை பெற்றது. அதற்கடுத்து 2009 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் 10.3 சதவிகித வாக்குகளை பெற்றது. 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் போட்டியிட்ட தேமுதிகவின் வாக்கு விகிதம் 7.9 ஆக சரிவை கண்டது. 2014 மக்களவை தேர்தலில் 5.1 ஆகவும், 2016 சட்டப்பேரவை தேர்தலில் 2.31 ஆக கடும் சரிவை கண்டது.
இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த மக்களை தேர்தலிலும் தேமுதிக வாக்கு சதவிகிதம் 2.19 ஆக குறைந்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக 3 சதவிகிதத்திற்கும் குறைவான வாக்கு சதவிகித்தை பெற்றிருப்பதால் தேமுதிகவின் மாநில அந்தஸ்து ரத்தாக உள்ளது. இதற்கான பணிகளை துவக்கியுள்ள மாநில தேர்தல் ஆணையம் இதற்கான அறிக்கையை மத்திய தேர்தல் ஆணையத்திற்கு விரைவில் அனுப்ப உள்ளது.
மாநில அந்தஸ்தை தேமுதிக இழந்தால் முரசு சின்னமும் பறிபோய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது
.