கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக, இன்று (டிச.9) சிதம்பரம் வருகை தந்த தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 'தானே', 'நீலம்', 'கஜா', 'நிவர்' தற்போது 'புரவி' புயல் எந்தப் புயலாக இருந்தாலும் டிசம்பர் மாதம் வந்து பேரழிவைக் கொடுத்துச் செல்கிறது. டிசம்பர் மாதம் என்றாலே அழிவு என்று அர்த்தம் புரிகிறது. எந்தப் புயலாக இருந்தாலும் முதலில் தே.மு.தி.க களத்தில் இறங்கி மக்களுக்காகப் போராடும்.
சிதம்பரம், சீர்காழி, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்து மக்களை சந்தித்து தே.மு.தி.க சார்பில் நிவாரணம் வழங்கிக் கொண்டிருக்கிறோம். அனைத்துப் பிரச்சனைகளும் நாம் தீர்க்க முடியாது, இருந்தாலும் எங்களால் முடிந்ததை செய்கிறோம். ஆனால், ஆளுங்கட்சியினர் கவனத்திற்குக் கொண்டு சென்று மக்களுக்குத் தேவையானதைப் பெற்றுத்தரும் இயக்கம் தே.மு.தி.க.
மத்திய குழுவினர் ஆய்வு செய்து சென்றுள்ளனர். புயல் தவிர்க்கமுடியாதது. கடலோரம் உள்ளதால் இந்த கடலூர் மாவட்டம் அதிகமாகப் பாதிக்கப்படுகிறது. தானே புயல் பாதிப்பின்போது நமது கேப்டன் விஜயகாந்த், கிராமம் கிராமமாகச் சென்று ஆறுதல் கூறினார். கடலூர் மாவட்ட விவசாயிகள் பெரிய பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஆனால், அரசு எந்தவித உயிர் சேதமும் இன்றி நல்ல நடவடிக்கை எடுத்ததற்காகப் பாராட்டுகிறோம்.
வயல்வெளிகள் தண்ணீரில் மூழ்கி உள்ளதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். வேளாண் சட்டத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராடும் விவசாயிகள் மற்றும் மத்திய அரசு, இரு தரப்பும் விட்டுக்கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டும். இதுவரை ஒன்பது முறை பேச்சுவார்த்தை நடந்து பிடிவாதமாக இருப்பதால், பேச்சுவார்த்தை முறிந்துவிடுகிறது. இதன் பின்னணியில் அரசியல் இருப்பதாக நான் உணர்கிறேன்.
பஞ்சாபில் கோதுமை விளைச்சல் அதிகமாக இருப்பதால் இந்த விவசாயிகள் பின்னணியில் கார்ப்ரேட் கம்பெனிகள் இருப்பதாக நான் உணர்கிறேன்” என்றார்.
ரஜினிகாந்த், அ.தி.மு.க கூட்டணி ஏற்படும் சூழல் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, அதற்குப் பதில் அளித்த பிரேமலாதா, “ரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும், கட்சியின் பெயரை கூறட்டும், தமிழ்நாடு முழுவதும் அவர் சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்திக்கட்டும், பிறகு எங்கள் கருத்தைக் கூறுகிறேன்” என்றார்.