“அதிமுக ஆட்சி மாதிரி வருமா? அப்பல்லாம் முனிசிபாலிட்டி கவுன்சிலர்களுக்கு, கான்ட்ராக்டர்களோட பங்கா ஒவ்வொரு மாசமும் பணக்கவர் கொடுப்பாங்க. திமுக ஆட்சிக்கு வந்துச்சு... இப்ப.. விருதுநகர் எம்.எல்.ஏ.வும் முனிசிபல் சேர்மனும் ரெண்டு பேருமே திமுக.. ஆனா.. கவுன்சிலர்கள் கைக்கு கவர் வந்ததே இல்ல. இப்ப பாருங்க.. தீபாவளி பணம்னு சொல்லி கவுன்சிலர் தலைகளை எண்ணி, சேர்மன் மாதவன் மூலமா ரூ.25000 கொடுத்திருக்காங்க. சம்பாதிக்கிறத எல்லாம் மொத்தமா அவங்களே வச்சிக்கிட்டு.. ஒப்புக்கு கொடுக்கிறாங்க. இந்த சொற்பத் தொகை எப்படி சரியா வரும்?” என விருதுநகர் நகர்மன்றத் தலைவர் தனலட்சுமியின் கணவர் துளசிராமன் அழைப்பின் பேரில், கட்சிகளைக் கடந்த பாசத்துடன் கொரியர் அலுவலகம் ஒன்றில் கவுன்சிலர்கள் ஒன்றுகூடி விவாதித்து அங்கலாய்த்தனர்.
ஆளும் கட்சிக்காரரான துளசிராமன், தோழமைக் கட்சி கவுன்சிலர்களோடு சேர்ந்து நடத்திய இந்த ரகசியக் கூட்டத்தின் பின்னணியில் ‘சதி’ எதுவும் இருக்குமோ என்று சந்தேகப்பட்ட சேர்மன் மாதவன் விஷயத்தை விருதுநகர் எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர். சீனிவாசனிடம் கூற, பலமான கவனிப்புடன் அதிருப்தி கவுன்சிலர்களை ஆளுக்கொரு திசையாகப் பிரித்துவிட்டனர். ஆனாலும், மொத்தம் உள்ள 36 கவுன்சிலர்களில் திமுக - 2, காங்கிரஸ் – 2, அதிமுக – 3, சிபிஎம் – 1, சுயேச்சை -1 என 9 கவுன்சிலர்கள் “உங்க பணமே வேண்டாம்..” என்று ஒதுங்கிக்கொண்டதும் நடந்திருக்கிறது.
ரகசியக் கூட்டம் நடத்தியதன் பலனாக, வைஸ்-சேர்மன் தனலட்சுமியின் கணவர் துளசிராமனுக்கு ரூ.1 லட்சம் கிடைத்திருக்கிறது. புதிதாக சீட் கிடைத்து ஆளும்கட்சி கவுன்சிலர்கள் ஆனவர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. திமுக எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர். சீனிவாசனின் கவனிப்பை நிராகரித்த 20-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் செல்வரத்னா சார்பில் நம்மிடம் பேசிய அவருடைய கணவர் திலக் “ஆமாங்க.. துளசிராமன் கூப்பிட்டாருன்னு எல்லாரும் போய் பேசினாங்க. நானும் போயிருந்தேன். அங்கிருந்து போயி எம்.எல்.ஏ.வை பார்த்தோம். திமுக ஆளுங்க அப்படியே தனித்தனியா போயிட்டாங்க. காங்கிரஸ் கவுன்சிலர்களும் எம்.எல்.ஏ.வை பார்த்துட்டு வெளிய வந்துட்டாங்க. காங்கிரஸ் கவுன்சிலர்கள் மொதல்ல பணம் வாங்கல. பணம் வாங்குறதுல எனக்கு உடன்பாடு இல்ல. நான் வாங்கல” என்றார்.
வைஸ்-சேர்மன் தனலட்சுமியின் கணவர் துளசிராமனிடம் பேசினோம். “எல்லா கவுன்சிலர்களும் ஒற்றுமையா இருந்து நல்லது செய்யணும்கிறது என்னோட ஆசை. வார்டுல ஏதாச்சும் நல்லது நடக்கணும்னு பொதுமக்கள் எதிர்பார்க்கிறாங்க. எல்லாரும் நல்லா இருக்கணும்னு எம்.எல்.ஏ. நினைப்பாரு. அதுக்காக அவரு கூப்பிட்டு பேசும்போது.. ஏரியாக்கள்ல வேலை நடக்கணும். அதிகாரிகள் நல்லபடியா செஞ்சு கொடுக்கணும்னு.. நாங்க எங்களோட கருத்த சொன்னோம்.” என்றவரிடம் ‘உங்களுக்கு மட்டும் தீபாவளி கவனிப்பு ரூ.1 லட்சமாமே?’ என்று இடைமறித்தபோது “நாங்கள்லாம்.. எங்களுக்கு ரூபா வேணாம்னுதான் சொன்னோம். பணத்த பெரிசா நினைக்ககூடியவர்கள் நாங்க கிடையாது” என்று ஒரே போடாகப் போட்டார்.
விருதுநகர் நகர்மன்றத் தலைவர் மாதவனை தொடர்புகொண்டோம். “உங்களுக்கு யாரோ தப்பான தகவல் கொடுத்திருக்காங்க. மற்ற விபரம் எதுவும் எனக்கு தெரியாது. நீங்க ஏதோ சொல்றீங்க.. நான் கேட்டுக்கிறேன். இல்லாதத மிகைப்படுத்தி சொல்லிருக்காங்க. இத பெருசாக்கணும்னு நினைக்கிறாங்க.” என்றவர் “இங்கே நகராட்சி இன்ஜினியர் மணி சரியில்ல. அவர் விருதுநகருக்கு கிடைத்த சாபக்கேடு” என்று ‘டிராக்’ மாறி பேசினார்.
விருதுநகர் எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர். சீனிவாசனிடம் இருந்து விளக்கத்தைப் பெற அவரது கைபேசி எண்ணில் (984XXXX844) தொடர்புகொண்டபோது நம்மைத் தவிர்த்தார். குறுந்தகவல் அனுப்பியும் பதில் இல்லை. விருதுநகர் நகர்மன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பைச் சமாளிப்பதற்கு தீபாவளி கவனிப்பாக பெரும் தொகை கொடுத்தது குறித்து விளக்கம் அளிக்க அவர் முன்வந்தால் வெளியிடத் தயாராகவே இருக்கிறோம்.
விருதுநகரில் மட்டுமல்ல.. பெரும்பாலான நகராட்சிகளில் சத்தமில்லாமல் ‘தீபாவளி பஞ்சாயத்துகள்’ நடந்திருக்கின்றன.