தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் இன்று (09/01/2022) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலைகள் முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டது. காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஊரடங்கையும் மீறி வெளியில் சுற்றியவர்களுக்கு ஆங்காங்கே அபராதங்களும் விதிக்கப்பட்டது.
அதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு விதித்துள்ளக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இன்று (09/01/2022) காலை முதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் மாவட்டம் முழுவதும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, இன்று (09/01/2022) மாலை நகரின் முக்கிய சாலைகளில் தனியாக சைக்கிளில் பயணம் செய்து, ஊரடங்கை பொதுமக்கள் முறையாகக் கடைபிடிக்கிறார்களா என்பது குறித்து ஆய்வு செய்தார். அப்போது, சில இடங்களில் முகக்கவசம் இல்லாமல் நின்றுக் கொண்டிருந்த இளைஞர்களை அழைத்து அறிவுரை சொன்னதோடு, அவர்களுக்கு முகக்கவசம் வழங்கி இனிமேல் வீட்டை விட்டு வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.
சுமார் 5 கி.மீ. தூரம் சைக்கிளில் பயணம் செய்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.