திருச்சி புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள நந்தியாற்றில் தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக நீர் பெருக்கெடுத்துவருவதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நந்தியாற்றில் மழையின் காரணமாக மிகை நீரானது சங்கேந்தி பகுதியில் வயல்கள் மற்றும் இதரப்பகுதிகளில் சூழ்ந்துள்ளதை டிராக்டரில் ஏறிச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, இருதயபுரம் வரை சென்று மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளையும், இருதயபுரத்தில் நந்தியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரைப் பாலத்திலிருந்து பார்வையிட்டார். உப்பாறு வாய்க்கால், புள்ளம்பாடி வாய்க்கால், பெருவளை வாய்க்கால், பங்குனி வாய்க்கால், அய்யன் வாய்க்கால், கண்டிராதீர்த்தம் ஏரி, விரகாலூர் ஏரி, சங்கேந்தி ஏரி ஆகியவற்றின் வடிகாலாக நந்தியாறு செல்வதையும், முடிவாக கொள்ளிடத்தில் சென்று சேர்வதையும் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.
பல வாய்க்கால்களுக்கும் ஏரிகளுக்கும் வயல்வெளி பகுதிகளிலிருந்து வெளியேறுகிற நீர் செல்கிற வகையில் வடிகாலாக உள்ள நந்தியாற்றினை முழுமையாக அகலப்படுத்தி, தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்திட திட்டமிட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளதைக் கணக்கெடுத்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்திரபாண்டியன், வருவாய் கோட்டாட்சியர் ச. வைத்தியநாதன், நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர்கள் மணிமோகன், சரவணன், உதவி செயற்பொறியாளர்கள் ஜெயராமன், தயாளகுமார், ஒன்றியக்குழுத் தலைவர்கள் ரசியா கோல்டன் ராஜேந்திரன் (புள்ளம்பாடி), தி. இரவிச்சந்திரன் (இலால்குடி) மற்றும் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள் உடனிருந்தனர்.