பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியாக திட்டம் 1-ல் ஒரு பெண் குழந்தை மட்டும் இருக்க வேண்டும், ஆண் வாரிசு இருக்கக்கூடாது. பெற்றோரில் ஒருவர் குடும்பநல அறுவை சிகிச்சை செய்து இருக்க வேண்டும். குழந்தையின் வயது 3-க்குள் இருக்க வேண்டும். குழந்தையின் பெயரில் ரூபாய் ஐம்பதாயிரம் வைப்பீடு செய்யப்படும்.
திட்டம் 2-ல் இரண்டு பெண் குழந்தை மட்டும் இருக்க வேண்டும். ஆண் வாரிசு இருக்கக்கூடாது. பெற்றோரில் ஒருவர் குடும்பநல அறுவை சிகிச்சை செய்திருக்கவேண்டும். குழந்தை மூன்று வயதுக்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையின் பெயரில் ரூபாய் 25 ஆயிரம் வைப்பீடு செய்யப்படும்.
திட்டம் 3-ல் பெற்றோர் ஒருவர் குடும்பநல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். ஆண் வாரிசு இருக்கக்கூடாது. முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையும், இரண்டாவது பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தையும் பிறந்திருந்தால் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரில் 25 ஆயிரம் வைப்பீடு செய்யப்படும்.
மேலும் தகுதியாக 35 வயதுக்குள் பெற்றோரில் ஒருவர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக்கூடாது. பிறகு ஆண் குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளவும் கூடாது.
விண்ணப்பிக்கும் போது குழந்தைகளின் பெற்றோர்கள் தமிழகத்தில் 10 ஆண்டுகள் வசித்தவராக இருக்க வேண்டும். திட்டம் 1-ன் கீழ் ஒரு பெண் குழந்தை மட்டும் இருப்பின் அக்குழந்தை பிறந்த மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். திட்டம் 2-ன் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் எனில் இரண்டாவது குழந்தை பிறந்த மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆண்டு வருமானம் ரூபாய் 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். அதற்காக பிறப்புச் சான்று, பெற்றோரின் வயது சான்று, குடும்ப நல அறுவை சிகிச்சை சான்று, வருமானச் சான்று, ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்று, இருப்பிடச் சான்று போன்றவற்றுடன் இணையதளத்தில் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம். என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.