கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை போலீஸார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
சிதம்பரம் பேருந்துநிலையத்துக்கு தினமும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். பேருந்து நிலையத்தில் பயணிகள் நிற்பதற்கான நடைபாதைகளை வியாபாரிகள் ஆக்கிரமித்தும், வாடகைக்கு விட்டும் கடை வைத்துள்ளனர். இதனால் பயணிகள் கடும் அவதியடைந்து வந்தனர். மேலும் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் பேருந்துகள் நிறுத்தப்படும் இடத்தில் நிற்கும் நிலை ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல், விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பல்வேறு பொதுநல அமைப்புகள் உள்ளட்ட பலர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.
நேற்று காலை சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் நகர இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன், போலீஸார், நகராட்சி ஊழியர்கள், பேருந்து நிலைய நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மேலும், போக்குவரத்திற்கு இடையூறாக வைத்திருந்த தள்ளுவண்டி கடை, பூக்கடை, பிளாட்பார கடை, விளம்பர தட்டிகளையும் உள்ளிட்டவைகளையும் அகற்றினர். இதுபோல சிதம்பரம் சின்மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து இடையூராக கடைகள் வைத்திருந்ததையும் அகற்றினர்.