Skip to main content

ஆளுநர் கார் மீது கறுப்புக்கொடி வீசிய திமுகவினர் 300 பேர் கைது!

Published on 22/06/2018 | Edited on 22/06/2018
black-flag-protes


நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்ற கார் மீது கறுப்பு கொடியை வீசிய திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று இரவு நாமக்கல்லுக்கு வருகை தந்தார். அங்கு இரவு ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பயணியர் சுற்றுலா மாளிகையில் தங்கிய அவர், பின்னர் இன்று காலை மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்ய சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்பட்டு சென்றார்.

 

 

அப்போது மணிக்கூண்டு, அண்ணாசிலை அருகே தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் ஆளுநரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திமுகவினர் நின்ற பக்கம் ஆளுநர் கார் சென்றபோது கையில் வைத்திருந்த கருப்புகொடிகளை ஆளுநர் கார் மீது தூக்கி வீசி எதிர்ப்பை தெரிவித்தனர். தி.மு.க.வினரின் கருப்பு கொடி போராட்டத்தின் மத்தியிலேயே சாலையில் திரண்டு இருந்த பொதுமக்களை நோக்கி ஆளுநர் தனது கைகளை அசைத்தபடி சிரித்துக்கொண்டே காரில் சென்றார்.

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. கே.எஸ்.மூர்த்தி, 31 பெண்கள் உள்பட 300 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி நாமக்கல்லில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதையடுத்து, ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டு விடாமல் இருக்கும் வகையில் கவர்னரின் காருக்கு முன்னாலும், பின்னாலும் போலீஸ் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து சென்றது. அதுபோல் கவர்னர் செல்லும் வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சார்ந்த செய்திகள்