சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளராகப் பணியாற்றி வந்தவர் செல்வராஜ். அக். 31ம் தேதியுடன் ஓய்வு பெற இருந்தார். இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றி வந்தார். அப்போது கிராம ஊராட்சிகளுக்குத் தேவையான எல்.இ.டி. மின் விளக்குகள் கொள்முதல் செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்டதாகப் புகார்கள் கிளம்பின.
இதையடுத்து, அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக செல்வராஜ் மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை முடிவடையாத நிலையில், அக். 31ம் தேதியுடன் ஓய்வு பெற இருந்த செயற்பொறியாளர் செல்வராஜ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை அரசுக்கு பரிந்துரை செய்தது. அதன்பேரில், அவரைப் பணியிடை நீக்கம் செய்து ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
ஓய்வுபெறும் நாளில் செயற்பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.