கூவம், அடையாறு கரையோரம் குடிசையில் வசிக்கும் மக்களை மறு குடியமர்த்த, சென்னை புளியந்தோப்பு கேசவ பிள்ளை பூங்கா பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் 2018ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டுவரை இரண்டு கட்டங்களாக கட்டப்பட்டன. முதற்கட்டமாக 764 வீடுகளும் இரண்டாவது கட்டமாக 1,056 வீடுகளும் என மொத்தம் 1,820 வீடுகள் கட்டப்பட்டன. கூவம், அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் அருகே குடிசைகளில் வசிப்பவர்கள் பயனாளிகளாக அந்தக் குடியிருப்பில் குடியேறி இரண்டு - மூன்று மாதங்களே ஆகும் நிலையில், கட்டடத்தில் பல இடங்களில் தொட்டாலே சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து விழும் அளவிற்கு தரமற்ற முறையில் இருப்பதாக அங்கு குடியிருக்கும் மக்கள் அச்சம் தெரிவித்த நிலையில், தற்காலிக சீரமைப்பு பணிகள் நடைபெற்றன.
இருப்பினும் இந்தக் கட்டுமானத்தின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டுமென குடியிருப்புவாசிகள் தெரிவித்துவந்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அத்தொகுதியின் திமுக எம்எல்ஏ பரந்தாமன் நேரில் ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார். அதேபோல் அமைச்சர் தா.மோ. அன்பரசனும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதுகுறித்து நேற்று (19.08.2021) சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.
''ஏற்கனவே கட்டப்பட்ட குடியிருப்புகள் பழுதடைந்ததால் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்ட கட்டடம் இது. கட்டுமானப் பணியில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தால் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பன்னடுக்கு கட்டடம் தொடர்பாக யார் முறைகேடு செய்திருந்தாலும் முதல்வர் வேடிக்கை பார்க்க மாட்டார்'' என அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேரவையில் தெரிவித்தார்.
இந்நிலையில், முதற்கட்டமாக இந்த விவகாரத்தில் குடிசை மாற்று உதவி பொறியாளர் பாண்டியன், உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் ஆகியோர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதனைத்தொடர்ந்து, இந்த விவகாரத்தில் எவ்வளவு விரைவாக விசாரணை நடத்த முடியுமோ அவ்வளவு விரைவில் விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.