பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்கியது
புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு சென்டாக் என்ற அரசு அமைப்பு மூலம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 15 தனியார் கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட்டிற்காக பெறப்பட்ட 3 ஆயிரத்து 630 இடங்களுக்கும், இரண்டு அரசு கல்லூரிகளில் உள்ள 561 இடங்கள் என மொத்தம் 4191 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது. இன்று காலை முன்னாள் ராணுவத்தினர், சுதந்திர போராட்ட வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. பிற்பகலில் இருந்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இன்று தொடங்கிய கலந்தாய்வில் பங்கேற்க 504 மாணவர்களுக்க அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மாணவ மாணவிகள் ஆர்வமுடன் தாங்கள் விரும்பும் கல்லூரியை தேர்வு செய்து வருகின்றனர். இன்று தொடங்கிய பொறியியல் கலந்தாய்வு வருகிற 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது,
-சுந்தரபாண்டியன்