கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்ல முயன்ற இயக்குநர் கவுதமன் ராமேஸ்வரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
மீனவ மக்களின் வாழ்வாதாரத்தின் ஆனிவேராக இருக்கும் கச்சத்தீவு அந்தோனியார் கோவிவில் இன்று தொடங்கி இரு நாட்கள் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் பங்கேற்க இயக்குனர் கவுதமனுக்கு விழா குழு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் கச்சத்தீவு செல்ல தடையில்லா சான்று வழங்க கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்திருந்தார். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதித்து வருவதால், உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் கவுதமன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, கவுதமன் மீது ஏற்கனவே மூன்று குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் தடையில்லா சான்று வழங்க முடியாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தமிழர்களின் உரிமைகளுக்காக போராட்டங்களில் தான் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கவுதமன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த நீதிபதி, இதேபோல கச்சத்தீவில் எவ்வித பிரச்சினையும் ஏற்படக்கூடாது என காவல்துறை நினைத்திருக்கலாம் என தெரிவித்து, வழக்கை ஏப்ரல் முதல் வாரத்துக்கு ஒத்திவைத்தார்.
இந்நிலையில், காவல்துறையின் மறுப்பை மீறி, இன்று காலை கச்சத்தீவு திருவிழாவுக்கு இயக்குநர் கவுதமன் செல்ல முயன்றார். அப்போது, ராமேஸ்வரம் அருகே அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.