ஆழ்துளை கிணறு விவகாரத்தில் விளம்பரத்திற்காக வழக்கு தொடர்ந்திருப்பதாக சென்னையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணப்பாறையில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் மரணமடைந்த சம்பவத்தை தொடர்ந்து, சென்னை பெரம்பூர் பகுதியில் 8 வீடுகள் கொண்ட டைமண்ட் குடியிருப்பில் பொதுப்பாதையில் இரண்டு ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்கக் கோரி, குடியிருப்பில் வசிக்கும் ஜெயஸ்ரீ என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அந்த ஆழ்துளைக் கிணறுகளை நேரில் சென்று ஆய்வு செய்ய மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டது. இன்று இந்த வழக்கு மீண்டும் நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நவம்பர் 11-ஆம் தேதி அந்தத் தனியார் குடியிருப்பில் உள்ள இரண்டு ஆழ்துளைக் கிணறுகளை நேரில் சென்று ஆய்வு செய்ததாகவும், அவை கான்கிரிட் கலவை மூலம் மூடப்பட்டிருப்பதாகவும் மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என மாநகராட்சி ஆணையர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதனை ஏற்றுகொண்ட நீதிபதி, ஆழ்துளைக் கிணறுகள் குறித்து விளம்பர நோக்கத்தில் வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு ரு.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.