பிள்ளைகள் ஆறு பேர் இருந்தும் ஒருவர் கூட உணவு வழங்கவில்லை என வயதான தம்பதி அளித்த புகாருக்கு திண்டுக்கல் போலீசார் ஒருமணி நேரத்தில் தீர்வு கண்டனர்.
திண்டுக்கல், ஆர்.எம்.காலனியைச் சேர்ந்தவர் பொன்னையா. இவரது மனைவி பாண்டியம்மாள். இவர்களுக்கு மூன்று ஆண், மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி, தனித்தனியாக வசித்துவருகின்றனர். பொன்னையா - பாண்டியம்மாள் தம்பதியினர் மட்டும் வாடகை வீட்டில் தனியாக வசித்துவருகின்றனர்.
வாட்ச்மேன் வேலை பார்த்துவரும் பொன்னையாவுக்கு ஏற்கனவே கை செயலிழந்துவிட்டது. தற்போது வயது மூப்பின் காரணமாக இருவருக்கும் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தற்போது கரோனா காரணமாக அவருக்கு வேலையும் இல்லை. இதனால் கணவன் மனைவி இருவரும் ஒரு வேளை சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்படுகின்றனர். பெற்ற பிள்ளைகள் ஆறு பேர் இருந்தும், இவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை.
இதனால் மனம் உடைந்த பொன்னையா, தனது மனைவியுடன் நேற்று (12.05.2021) திண்டுக்கல் நகர், மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் பிள்ளைகள் ஆறுபேர் இருந்தும் இந்தக் கரோனா காலகட்டத்தில் ஒரு வேளை சாப்பாடுகூட போடவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் நாகராணி, எஸ்.எஸ்.ஐ. சுப்பிரமணி ஆகியோர் உடனே அவர்களது பிள்ளைகளை வரவழைத்து விசாரணை நடத்தினர். அனைவரிடமும் நடந்த பேச்சுவார்த்தை முடிவில், பொன்னையா, பாண்டியம்மாள் இருவரும் தங்களின் கடைசி மகளான மகேஸ்வரியுடன் செல்வதாக கூறினர். இதையடுத்து போலீஸார் இருவரையும் அவர்கள் விருப்பத்தின் பேரில் மகேஸ்வரியுடன் அனுப்பிவைத்தனர். இந்தக் கரோனா காலத்தில் புகார் கொடுத்த ஒருமணி நேரத்தில் வழக்கு விசாரணையை அதிரடியாக முடித்த இன்ஸ்பெக்டர் நாகராணியை பொதுமக்களும் அதிகாரிகளும் பாராட்டினார்கள்.