தமிழக அரசு அறிவித்த ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூபாய் இரண்டாயிரம் வாங்குவதற்கான பயனாளிகளின் தேர்வு செய்யும் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டி பேரூராட்சியில் உள்ள பொதுமக்கள் தாங்களும் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பதாக கூறி மனுக்களை வழங்கினார்கள். 1998, 2003, 2005ம் வருடங்களில் தயாரிக்கப்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் அடிப்படையில் மனுக்களை வாங்கி வருகின்றனர். 1998 முதல் 2005 வரை 761பேர்தான் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் உள்ளனர். அதன்பின்னர் உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் இஷ்டம் போல் புகுந்து விளையாடியதால் தற்போது 1500 பேருக்கு மேல் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் இருப்பதாக கூறுகின்றனர்.
நேற்று ரூபாய் இரண்டாயிரம் வாங்க பேரூராட்சியில் பதிவு செய்ய மக்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டம் கட்டுக்கடங்காமல் போகவே காவல்துறையினர் வந்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார்கள். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்ற பட்டியலுடன் பதிவு செய்ய வந்தவர்களில் பலர் இலட்சக்கணக்கில் வெளிநாடுகளில் ஜவுளி வியாபாரம் மூலம் சம்பாதிப்பவர்களும், நான்கு, ஐந்து வீடுகள் வைத்திருப்பவர்களும், அரசு பணியில் ஓய்வு பெற்று பென்சன் வாங்குபவர்களுக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பட்டியலில் இருப்பதை பார்த்து பேரூராட்சி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்... சின்னாளபட்டியில் கூட்டுறவு சங்கங்களில் நிவாரணம் வாங்குவதற்காக முறைகேடாக பதிவு செய்தவர்கள் தான் தற்போது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் அதிகம் உள்ளனர். அவர்களை நீக்கிவிட்டு முறையாக நெசவு நெய்து வறுமையுடன் வாழும் நெசவாளர்கள், கூலித் தொழிலாளர்கள், சொந்த வீடு இல்லாதவர்களுக்குத்தான் ரூபாய் இரண்டாயிரம் வழங்க வேண்டும் என்று கூறினார்கள்!