திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு நகர அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும் என நிர்வாகிகள் விரும்பினர். ஆனால், வத்தலக்குண்டில் பெரியார் சிலை எதுவும் இல்லை என்பதால், பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க சின்னாளபட்டிக்குச் செல்லலாம் என முடிவெடுத்தனர். அப்போது அ.ம.மு.க.வைச் சேர்ந்த ஒருவர் உசிலம்பட்டி சாலையில் உள்ள பெரியார் சமத்துவபுரத்தில், பெரியார் சிலை உள்ளது என நினைவூட்டினார். இதனால், குஷி அடைந்த அ.ம.மு.க. நகரச் செயலாளர் செண்பகம், மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் மணிகண்டன், பேச்சாளர் நசீம், கோபால் உள்ளிட்டோர் சமத்துவபுரத்தில் கவனிக்கப்படாமல் இருந்த பெரியார் சிலையைச் சுத்தம் செய்து தயார்ப்படுத்தினார். அதைத் தொடர்ந்து மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் சுரபி ஜோதி முருகன் தலைமையிலான அ.ம.மு.க.வினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
இதனிடையே, அ.ம.மு.க.வினர் ஆர்வமிகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகக் கொடியினை பெரியார் சிலை பக்கவாட்டுக் கம்பியில் கட்டிவிட்டுச் சென்றனர்.