கரோனாவிலிருந்து பொதுமக்களை காப்பாற்றுவதற்காக தமிழக அரசு 144 தடை உத்தரவு போட்டு இருப்பதால் மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். ஆனால் அத்தியவாசிய பொருட்கள் வாங்க காலையில் மட்டும் வெளியே போய் வருகிறார்கள். இப்படி போக கூடிய மக்கள் பலர் அந்தந்த பகுதிகளில் உள்ள கறிக்கடை கோழி கடைகளுக்கு சென்று கறிகளையும் வாங்கி வருகிறார்கள். இப்படி கறிகளை வாங்க செல்லும் மக்கள் இடைவெளிவிட்டு நிற்காமல் கூட்டமாக கடைகளில் நிற்பதால் அதன் மூலமும் கரோனா வைரஸ் பரவ வாய்ப்பு இருக்கிறது என்று கருதிய தமிழக அரசு திடீரென கறிகடைகளை இழுத்து மூடச் சொல்லி அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
அதன் அடிப்படையில்தான் கடந்த ஐந்தாம் தேதி தமிழகத்தில் அனைத்து கடைகளும் இழுத்து மூடப்பட்டாலும் கூட, அங்கங்கே கறிக்கடைகள் விற்பனை செய்தும் வந்தனர். அதுபோல்தான் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அரசு உத்தரவின்படி இழுத்து மூடப்பட்டது. ஆனால் சிலர் ஆங்காங்கே கறிக்கடைகளை உள்புறமாக பூட்டி வைத்துக் கொண்டு மறைமுகமாக பொதுமக்களுக்கு ஆட்டு கறிகளை ஒரு கிலோ ஆயிரம் ரூபாயிலிருந்து 1,500 ரூபாய் வரைக்கும் கொடுத்து வந்தனர். அதுபோல் கோழிக்கறியும் கிலோ 250 ரூபாய் வரை விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் சிறுமலை அடிவாரத்தில் ஆட்டிறைச்சி கடை நடத்தி வந்த அபுதாகிர் என்பவர் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆட்டுக்கறி கொடுக்க வேண்டுமென்ற நோக்கத்தில் சாணார்பட்டியில் உள்ள தனது வீட்டில் ஒரு கிலோ, இரண்டு கிலோ என பொட்டலம் போட்டு கொடுக்க வைத்து இருந்தார்.
இந்த விஷயம் தாலுகா டி.எஸ்.பி. வினோத்துக்கு தெரியவே உடனே காக்கிகளுடன் ஸ்பாட் விசிட் அடித்து கறிக்கடை உரிமையாளரான அபுதாகிரையும் கூப்பிட்டு கொண்டு வீட்டில் வாடிக்கையாளர்களுக்காக கொடுக்க வைக்கப்பட்டிருந்த 58 ஆயிரம் ரூபாய் பெருமான ஆட்டுக்கறியையும் பறிமுதல் செய்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
அதனடிப்படையில் தாலுகா காவல் நிலையத்தில் உள்ள போலீசாரும் கடை உரிமையாளரான அபுதாகிர் மேல் வழக்குப் பதிவு செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டுக்கறியை ஏதாவது ஒரு இடத்தில் குழி தோண்டி புதைக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை. ஆனால் காவல் நிலையத்தில் இருந்த காக்கிகளோ அந்த ஆட்டு கறியை ஆளுக்கு ஒரு கிலோ இரண்டு கிலோ என கூறு போட்டு கொண்டு வீடுகளுக்கு எடுத்துச் சென்று விட்டனர். அதை கேள்விப்பட்டு கறிக்கடை உரிமையாளரும் மனம் நொந்து போய்விட்டார். இந்த விஷயம் காக்கிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.